
தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஃபோர்டு ஆலையை மீண்டும் உற்பத்திக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் முதற்கட்டமாக அடுத்த தலைமுறை என்ஜின் உற்பத்திக்கு சுமார் ரூபாய் 3,250 கோடி முதலீடு திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேரடியாக 600 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2024ல் கையெழுத்திடப்பட்ட விருப்பக் கடிதத்தின் அடிப்படையில், நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஃபோர்டு திட்டங்களுக்கு இந்தியாவின் “உற்பத்தித் திறனை” பயன்படுத்துவதற்கான முயற்சியாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டனர். மூத்த நிறுவன நிர்வாகிகள் இன்று நவம்பர் 31ஆம் தேதி முதல்வர் திரு. மு.க. ஸ்டாலினை சந்தித்தனர். இந்த ஆலை ஆண்டுக்கு 2,35,000 யூனிட் தயாரிப்பு திறனை கொண்டிருக்கும் என்றும் 2029-ல் உற்பத்தியைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபோர்டு இந்தியாவின் தற்போதைய உற்பத்தி உள்கட்டமைப்பை பயன்படுத்தி அடுத்த தலைமுறை என்ஜினை உற்பத்தி செய்து முதற்கட்டமாக ஏற்றுமதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. “எங்கள் திட்டங்களை மேம்படுத்துவதற்கும், ஃபோர்டின் உற்பத்தி மையங்களில் சென்னை ஆலையின் முக்கிய பங்கை உறுதிப்படுத்துவதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச சந்தைக் குழுவின் தலைவர் ஜெஃப் மாரென்டிக் கூறினார்.

“இந்தத் திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துச் செல்லும்போது தமிழ்நாடு அரசாங்கம் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த முடிவு எதிர்கால தயாரிப்புகளுக்கு இந்தியாவின் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
சென்னை ஆலை உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் ஏற்றுமதி சந்தைகள் பற்றிய விவரங்கள் உற்பத்திக்கு முன்பாக பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

