
மாருதி சுஸூகி நிறுவனத்தின் வேகன்-ஆர் மாடலில் பிரசத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சுழலும் இருக்கை வழங்கப்பட்டுள்ளதால் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காருக்குள் ஏறுவதையும் இறங்குவதையும் எளிதாக்கும் வகையில்இந்த வசதியை இப்போது வழங்குகிறது.
இந்தச் சிறப்பு இருக்கையானது காரின் கதவு திறக்கும்போது வெளிப்புறமாகச் சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமமின்றி இருக்கையில் அமர்ந்து, பின்னர் எளிதாகக் காருக்குள் திரும்பிக்கொள்ள முடியும். மாற்றியமைக்கலாம் இது ஒரு கூடுதல் உதிரிபாகமாக கிடைப்பதனால், நீங்கள் புதிதாக வாங்கும் வேகன் ஆர் காரில் மட்டுமல்லாமல், ஏற்கனவே உங்களிடம் உள்ள பழைய வேகன் ஆர் (2019க்கு பிறகு வந்தவை) காரிலும் இதைப் பொருத்திக்கொள்ளலாம்.
இந்த இருக்கை ARAI அமைப்பால் சோதிக்கப்பட்டு பாதுகாப்பானது எனச் சான்றளிக்கப்பட்டு இதற்கு 3 ஆண்டுகள் வரை வாரண்டி வழங்கப்படுகிறது. காரின் அசல் வடிவமைப்பிலோ அல்லது கட்டமைப்பிலோ எந்த மாற்றமும் செய்யாமலேயே, வெறும் ஒரு மணி நேரத்தில் இந்த இருக்கையைப் பொருத்திக்கொள்ள முடியும்.

விலை மற்றும் கிடைக்கும் இடங்கள்:
இந்த இருக்கைக்கான கிட் விலை சுமார் ரூ. 59,999 மற்றும் பொருத்துவதற்கான கட்டணம் ரூ. 5,000 என மொத்தம் சுமார் ரூ. 64,999 ஆகும். தற்போது இது ஒரு முதற்கட்டமாக சென்னை உட்பட இந்தியாவின் 11 முக்கிய நகரங்களில் உள்ள 200-க்கும் மேற்பட்ட மாருதி சுஸுகி அரீனா டீலர்ஷிப்களில் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் பொறுத்து மற்ற நகரங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.
பெங்களூருவைச் சேர்ந்த ட்ரூஅசிஸ்ட் டெக்னாலஜி என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் இணைந்து மாருதி சுஸுகி இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

