ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வருவதனால் இரு சக்கர வாகனம் விலை குறையுமா அல்லது உயருமா என்பதனை இங்கே அறிந்து கொள்ளலாம்.
GST வரி :
சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில்5%, 12 %, 18% மற்றும் 28 % என 4 விதமான பிரிவுகளில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக வரி விதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு பிரிவுகளில் மோட்டார் வாகன துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி இரு சக்கர வாகனம் – 350சிசி க்கு குறைவான மாடல்கள்
350 சிசி க்கு குறைவான திறன் பெற்ற அனைத்து இருசக்கர வாகனங்களுக்கு வரி 28 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடை முறையின் படி மாநில வாரியாக பல்வேறு மாறுபாடுகளுடன் அதிகபட்சமாக இருசக்கர வாகனங்களுக்கு 28-35 % வரி விதிக்கப்படுகின்றது. மேலும் மோட்டார் சைக்கிள்களுக்கு 13 வகைகளில் மாறுபடுகின்றது.
புதிதாக நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரியின் காரணமாக உதிரிபாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் என இரண்டுக்குமே 28 % நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 350சிசி க்கு குறைவான எஞ்சின் பெற்ற பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களின் விலை கனிசமாக குறையும் வாய்ப்புகள் உள்ளது.
தற்போது விலை குறைப்பை முன்னிட்டு பஜாஜ் ஆட்டோ,ராயல் என்ஃபீல்டு, யூஎம் மோட்டார் சைக்கிள், லோகியா, ஹோண்டா மற்றும் டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் வெளிப்படையாக அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் தற்போதே விலை குறைப்பு சலுகைகளையும் சில நிறுவனங்களின் டீலர்கள் வழங்கி வருகின்றனர்.
மாநில வாரியாக வரி விதிப்பு மாறுபடும் என்பதனால் அதிகபட்சமாக இருசக்கர வாகன விலை 2-4% வரை குறையும் வாய்ப்புகள் உள்ளது. அதிகார்வப்பூர்வமான விலை குறைப்பை நிறுவனங்கள் ஜூலை 1ந் தேதி அறிவிக்க உள்ளன.
ஜிஎஸ்டி இரு சக்கர வாகனம் – 350சிசி க்கு கூடுதலான மாடல்கள்
குறிப்பாக நாம் முன்பே வெளியிட்டிருந்தபடி சூப்பர் பைக் பிரியர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை கூடுதலான சுமையாக அமைந்திருக்கும், குறிப்பாக தற்போது சராசரியாக விதிக்கப்படுகின்ற 30 சதவிகித வரி 31 சதவிதமாக உயருவதனால் 350சிசி க்கு கூடுலான பைக்குகள் விலை கனிசமாக உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சொகுசு கார் சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள மிகப்பெரிய சலுகைகளை போல இரு சக்கர வாகன பிரிவுக்கு வழங்கப்படவில்லை என்றாலும் குறைந்தபட்ச சிசி கொண்ட ஸ்கூட்டர்கள் , 100 முதல் 125 சிசி வரையிலான பிரிவுகளில் இருசக்கர வாகனங்கள் வாங்கும் நடுத்தர குடும்பங்களுக்கு சற்றே ஆதரவாக இந்த இரு சக்கர வாகன சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு முறை அமைந்திருக்கும்.
மற்ற பிரிவுகளை தொடர்ந்து படிக்க இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன்..!