இந்தியாவின் முதன்மையான ஸ்கூட்டர் தயாரிப்பாளராக விளங்கும் ஹோண்டா நிறுவனம், ஸ்கூட்டர் விற்பனையில் புதிய உச்சத்தை அதாவது 2.5 கோடி ஸ்கூட்டர்கள் எண்ணிக்கையை 17 ஆண்டுகளில் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 57 சதவீத பங்களிப்பை இந்தியாவில் பெற்று விளங்கும் நிலையில், இந்நிறுவனத்தின் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மிக சிறப்பான ஆதரவை பெற்று விளங்கி வருகின்றது. முதன்முறையாக ஹோண்டா நிறுவனம் 2001 ஆம் ஆண்டு இந்தியாவில் முதல் ஆக்டிவா ஸ்கூட்டரை வெளியிட்டது.
அறிமுகம் செய்த 13 ஆண்டுகளில், 1 கோடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்து சாதனை படைத்தது.ஆனால், இந்த சாதனையை, அடுத்த 3 ஆண்டுகளில் முறியடித்து, மேலும், 1 கோடி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. அடுத்து ஓராண்டுக்குள்ளாகவே கூடுதலாக, 50 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து உள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த உதவி தலைவர், யாதவிந்தர் சிங் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், அன்புமே எங்களது இந்த வளர்ச்சிக்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.