ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஷைன் 100 (Honda Shine 100) பைக் மாடல் விலை ரூபாய் 64,900 விலையில் ஆரம்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளரான ஹீரோ ஸ்ப்ளெண்டர், HF 100, HF டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகளுக்கு சவால் விடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் முன்பதிவு துவங்கப்பட்டுள்ள பைக்கிற்கு ஏப்ரல் முதல் உற்பத்தி தொடங்கி மே முதல் வாரத்தில் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனையில் உள்ள பிரசத்தி பெற்ற 125சிசி சிபி ஷைன் பைக் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஷைன் 100 பைக் மாடல் மிக நேர்த்தியான 5 விதமான நிறங்களை பெற்றதாக அமைந்துள்ளது.
Honda Shine 100
ஹோண்டா ஷைன் 100 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் இரட்டை பின்புற ஷாக் அப்சார்பர், ஐந்து ஸ்போக் உடன் கூடிய அலாய் வீல் உடன் பிரேக்கிங் அமைப்பில் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டத்துடன் முன் மற்றும் பின்புற டிரம் பெற்றுள்ளது.
ஷைன் 100 பைக்கிற்கு உருவாக்கப்பட்ட புதிய எஞ்சின் முற்றிலும் புதிய டைமண்ட் ஃபிரேம் சேஸ் உடன் 1245மிமீ வீல்பேஸ், 786மிமீ இருக்கை உயரம் மற்றும் 168மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவற்றுடன் வந்துள்ளது. கருப்பு நிறத்தை அடிப்படையாக கொண்ட சிவப்பு, நீலம், பச்சை, தங்கம் மற்றும் சாம்பல் நிற கோடுகளுடன் 5 வண்ண விருப்பங்களில் கிடைக்கும்
ஷைன் 100 பைக்கில் புதிய 100 சிசி என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 7.6 பிஎச்பி பவரையும், 8.02 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இந்த என்ஜின் E20 மற்றும் OBD2 இணக்கமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த மாடலில் 4 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றிருக்கலாம்.