ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் எலக்ட்ரிக் பைக் தயாரிக்க டுகாட்டின் ஸ்கிராம்பளர் வடிவமைப்பாளரான மரியோ அல்விசி நியமித்துள்ளதாக ஐஷர் தலைவர் சித்தார்த் லால் தெரிவித்துள்ளார்.
டுகாட்டி மட்டுமல்லாமல் ஃபியட் அபார்த், ஆல்ஃபா ரோமியோ போன்ற நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ள மரியோ அல்விசி ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் EV வாகன தயாரிப்பு, பிராண்டிங், சந்தைக்கு கொண்டு செல்லுதல் மற்றும் தயாரிப்பு மூலோபாயம் ஆகியவற்றின் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Royal Enfield First Electric bike
விற்பனையில் கிடைக்கின்ற பெட்ரோல் என்ஜின் பெற்ற ராயல் எட்ஃபீல்டு பைக்குகள் போல அல்லாமல், பிரத்தியேகமான வடிவமைப்பினை பெற்றதாக ராயல் என்ஃபீல்டு எலக்ட்ரிக் பைக் தயாரிக்கப்பட உள்ளது. தற்பொழுது ஆரம்ப கட்ட முன்மாதிரிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முதல் எலக்ட்ரிக் பைக் மாடல் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு தனது EV வணிகத்தில் ரூ. 1,500 கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ள நிலையில் பிரத்தியேகமான எலக்ட்ரிக் பைக் ஆலையை செய்யாறு பகுதியில் துவங்க திட்டமிட்டுள்ளது.
சித்தார்த்த லால் கூறுகையில், “மரியோ சிறப்பான சாதனையை நிகழ்த்தியுள்ளார் எனவே நாங்கள் அனைவரும் ஒன்றாகச் செயல்படுவோம், மேலும் எலக்ட்ரிக் பைக் வணிகத்தை அவர் மேற்பார்வையிடுவார். இது எங்களுக்கு ஒரு புதிய வளர்ச்சிப் பிரிவு மற்றும் அவர் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு EV வணிகத்தை உருவாக்க எங்களுக்கான நபர்.” ஆவார்.
அவர் ராயல் என்ஃபீல்டின் டிசைன் பிரிவின் தலைவராக இருக்கும் மார்க் வெல்ஸுடன் மிக நெருக்கமாக பணியாற்றுவார். பெட்ரோல் எஞ்சின் போர்ட்ஃபோலியோவில் இருந்து எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மிக வலுவான வேறுபாடு இருப்பதை உறுதிசெய்வார், என குறிப்பிட்டுள்ளார்.
நாளை (செப்டம்பர் 1) ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 புதிய J சீரிஸ் என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இன்றைக்கு ஐஷர் தலைவர் சித்தாரத் லால் மற்றும் ஆர்இ சிஇஓ பி. கோவிந்தராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினர்.