ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் துவங்கப்பட்டு 120 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் சிறப்பு நிறத்தை பெற்ற 120th Anniversary Editions மாடலை 480 யூனிட்டுகளை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. வருகின்ற EICMA 2021 அரங்கில் காட்சிக்கு கொண்டு வரவுள்ளது.
1901 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் துவங்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் பல தடைகளை கடந்து தற்போது இந்தியாவின் ஐசர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.
விற்பனையில் கிடைத்து வருகின்ற 650சிசி என்ஜின் பெற்ற இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டினல் ஜிடி 650 என இரு மாடல்களையும் அடிப்படையாக கொண்ட 120வது ஆண்டுவிழா சிறப்பு பதிப்பில் கருப்பு க்ரோம் பாகங்களை கொண்டு கைகளால் வரையப்பட்ட மிக நேர்த்தியான லோகோ மற்றும் 120வது ஆண்டுவிழா பதிப்பு எழுத்துகளை பெற்றதாக அமைந்துள்ளது. கருமை நிறத்தை அனைத்து முக்கிய பாகங்களில் பயன்படுத்தியுள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சிறப்பு மோட்டார்சைக்கிள்களில் 480 எண்ணிக்கையில் மட்டுமே உற்பத்தி செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அனைத்து 480 மோட்டார் சைக்கிள்களும் பல நாடுகளுக்கு சமமாக விநியோகிக்கப்படும். இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 தலா 60 எண்ணிக்கை முறையே இந்தியாவில் மொத்தமாக 120 எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது. இதுதவிர, தென்கிழக்கு ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என இந்நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
வாங்குவது எப்படி..?
வரும் 6 டிசம்பர் 2021 அன்று இந்திய சந்தையில் 120வது ஆண்டு நிறைவு பதிப்பு மாடல்களுக்கான ஆன்லைன் விற்பனையை இந்நிறுவனம் தொடங்க உள்ளதால், வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 24 நவம்பர், 2021 முதல் ராயல் என்ஃபீல்டின் இணையதளத்தில் பதிவு செய்யலாம்.