இந்தியாவில் தொடர் சரிவினை சந்திக்கும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களில் ஒன்றான, ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் குறைந்த விலை பைக் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக ராயல் என்ஃபீல்ட் மோட்டார்சைக்கிள் விற்பனை கடுமையான சரிவினை சந்தித்து வருகின்றது. என்ஃபீல்டு மட்டுமல்லாமல் முன்னணி தயாரிப்பாளர்களான ஹீரோ, ஹோண்டா, பஜாஜ் உள்ளிட்ட முன்னணி பைக் நிறுவனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது. இந்தியர்களிடம் குறைந்து வரும் பணப்புழக்கம், அதிகரிக்கப்பட்ட காப்பீடு கட்டணம் மற்றும் வாகனங்களின் விலை உயர்வு காரணமாக தொடர் சரிவை இந்திய ஆட்டோமொபைல் சந்தை சந்தித்து வருகின்றது.
ராயல் என்ஃபீல்டு 250சிசி பைக்
பிரபலமான கிளாசிக் மற்றும் பாரம்பரியமிக்க புல்லட் போன்ற மாடல்கள் 350சிசி என்ஜின் கொண்டதாக தொடக்க நிலை மாடல்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தொடர்ந்து இந்திய சந்தையில் அதிகரித்து வரும் போட்டி நிறுவனங்களை ஈடுகட்டவும், குறைந்த விலை பைக் மாடலில் தனது பாரம்பரியத்தை வழங்கும் வகையில் புதிய பைக் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விற்பனையில் உள்ள பிரபலமான கிளாசிக் மற்றும் புதிய பிரீமியம் ரக இன்டர்செப்டார் 650 உள்ளிட்ட மாடல்களின் டிசைன் தாத்பரியங்களை பின்னணியாக கொண்டு நவீனத்துவமான பல்வேறு வசதிகளை பெற்றதாகவும் விளங்கும் வகையில் 250சிசி என்ஜின் பெற்ற மாடல் தயாரிக்கப்படலாம் என எக்கனாமிக் டைம்ஸ் இதழ் குறிப்பிடுகின்றது.
தற்போது இந்த பைக் தயாரிப்பதற்கான முதற்கட்ட வர்த்தக வாய்ப்புகள் ராயல் என்ஃபீல்டு இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு, யூகே டெக்கனிக்கல் மையம் போன்றவை மேற்கொண்டுள்ளன.
உற்பத்திக்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ராயல் என்ஃபீல்டு 250சிசி மோட்டார்சைக்கிள் 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு அறிமுகம் செய்யப்படலாம். 250சிசி என்ஜின் பைக் உற்பத்தி செய்யப்படும் போது மிகப்பெரிய விற்பனை சந்தைக்குள் என்ஃபீல்டு நிறுவனம் நுழைவதற்கான வாய்ப்பாக அமையும்.
நன்றி : et auto