ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம் சீனாவில் விற்பன செய்த 1,39,000 பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் கார்களை திரும்ப பெற உள்ளது. இந்த கார்களில் ஏற்பட்ட ஏர்கண்டிஷன் சிஸ்டம் பாதிப்பு காரணமாகவே இந்த கார்கள் திருப்ப பெறப்படுவதாகவும், இந்த திரும்ப பெறுதல் வரும் நவம்பர் 9 தேதி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிஎம்டபிள்யூ நிறுவனம், ஐரோப்பாவில் விற்பனை செய்யப்பட்ட தங்களது 3,23,000 கார்களில் தவறான உபகரணங்கள் பொருத்தப்பட்டதால் இன்ஜினில் தீ பிடித்த பிரச்சினை காரணமாக திரும்ப பெற உள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த திரும்ப பெறுதல் என்பது சீனாவில் 2005ம் ஆண்டு மே மாதம் மற்றும் 2011ம் ஆண்டு ஜூலை மாதங்களில் தயாரிக்கப்பட்ட 89 ஆயிரத்து 309 கார்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் புதிய தொழிற்சாலை ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே இந்த நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிஎம்டபிள்யூ பிர்லியன்ஸ் ஆட்டோமேத்டிவ் லிமிட்டெட் நிறுவனம் வடகிழக்கு சீனாவை மையமாக கொண்ட பிஎம்டபிள்யூ ஆட்டோமேத்டிவ் டிரேடிங் நிறுவனத்துடன் இணைந்து, இந்த பாதிக்கப்பட்ட கார்களை சோதனை செய்து, பழுதான பாகங்களை மாற்ற உள்ளது. இந்த பணிகளை இலவசமாகவே செய்ய உள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தான், தென்கொரியாவில் விற்பனையான பிஎம்டபிள்யூ கார்களின் எக்ஸ்ஹாஸ்ட் கியாஸ் காம்போனேட்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக தீ பிடிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பிஎம்டபிள்யூ கார்களுக்கு தடை விதிக்கப்பட்டதோடு, பிஎம்டபிள்யூ கார்களை திரும்ப பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.