அமெரிக்காவில் மகேந்திரா ஜீப்கள் விற்பனையை ஃபியட் கிறைஸ்லர் தடுக்க முயற்சிப்பது ஏன்?

தங்கள் ஜீப்பை போன்ற, மஹிந்திரா வாகன உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ள ஜீப்பிற்கு தடை விதிக்க கோரி, அமெரிக்காவில் உள்ள பன்னாட்டு வர்த்தக ஆணையத்தை, பியட் கார் தயாரிப்பு நிறுவனம் அணுகியிருக்கிறது.

பியட் கிரிஸ்லர் ஆட்டோமெபைல்ஸ் நிறுவனத்தின் சார்பில், இம்மாதம் ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தங்களுடைய ஜீப் ஐபி மாடலை அப்படியே காப்பியடித்து, ராக்ஸர் ஜீப்பை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்திருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தாங்கள் வடிவமைத்து பதிவு செய்து வைத்த ஜீப் ஐபி மாடலின் வடிவமைப்பில் ஒரு சிறியமாற்றம் கூட இன்றி, ராக்ஸரின் வெளிப்புறத் தோற்றம் உட்பட அனைத்தும் அச்சு அசலாக உள்ளதாகவும், பியட் கிரிஸ்லர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம், தங்கள் ஜீப் ரக வாகனங்களின் விற்பனை கணிசமாக உயர்ந்திருந்த நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் செயல்பாடு, தங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக, பியட் கிரிஸ்லர் ஆட்டோமெபைல்ஸ் தெரிவித்திருக்கிறது.