
இந்திய எஸ்யூவி சந்தையில் தனது க்ரெட்டா போல மிக வலுவான ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் மிகப்பெரிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி, 2027 நிதியாண்டிற்குள் இரண்டு முற்றிலும் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Made in India E-SUV
முதலாவதாக, டாடா நெக்ஸான் இவி-க்கு போட்டியாக ஒரு எலக்ட்ரிக் எஸ்யூவியை ஹூண்டாய் களமிறக்க உள்ளது. சர்வதேச சந்தையில் புகழ்பெற்ற ‘இன்ஸ்டர்’ (Inster) மாடலின் அடிப்படையில், இந்தியச் சாலைகளுக்காகவே பிரத்யேகமாக ‘HE1i’ என்ற குறியீட்டுப் பெயரில் இது உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் 300 முதல் 350 கிலோமீட்டர் வரை பயணிக்கக்கூடிய பேட்டரி திறனுடன், குறைந்த விலையில் ஒரு தரமான எலக்ட்ரிக் காரை எதிர்பார்க்கும் குடும்பங்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதமாக இருக்கும். பாதுகாப்பான பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் வரவிருக்கும் இந்த கார், இந்திய நடுத்தர மக்களின் எலக்ட்ரிக் கனவை நனவாக்க உதவும்.
இரண்டாவதாக, ICE வாகனச் சந்தையில் மாருதி ஃபிரான்க்ஸ் போன்ற ‘கிராஸ்ஓவர்’ மாடல்களுக்குப் போட்டியாகவோ அல்லது விக்டோரிஸ் மாடலுக்கு சவால் விடுக்கும் வகையிலான புதிய எஸ்யூவியை ஹூண்டாய் அறிமுகம் செய்யவுள்ளது. இது சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ‘பேயான்’ (Bayon) மாடலின் இந்தியப் பதிப்பாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Exter) மற்றும் வென்யூ (Venue) ஆகிய மாடல்களுக்கு இடையே இது நிலைநிறுத்தப்படும். குறிப்பாக, அதிக இடவசதி மற்றும் கம்பீரமான தோற்றத்தை விரும்பும் குடும்பங்களுக்கு, இந்த 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொண்டிருக்கலாம்.
டாடா மற்றும் மஹிந்திரா என இரு நிறுவனங்களும் மிக கடுமையான சவாலினை ஹூண்டாய் நிறுவனத்துக்கு ஏற்படுத்தியுள்ளதால் இரண்டாமிடத்தை இழந்துள்ள இந்நிறுவனத்துக்கு புதிய மாடல்கள் கைகொடுக்கமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்.

