இந்திய பயணிகள் கார் சந்தையில் கடந்த 16 வருடங்களாக விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் காரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25 லட்சத்தை வெற்றிகரமாக கடந்துள்ளது. 2004 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கான்செப்ட் எஸ் என்ற பெயரில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.
16 ஆண்டுகள்.., 25 லட்சம் ஸ்விஃப்ட் கார்கள்
மே 25, 2005 அன்று மாருதி சுசூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கடந்த 16 ஆண்டுகளில், மூன்று முறை முற்றிலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. முதல் தலைமுறை ஸ்விஃப்ட் அதன் முதல் 5 லட்சம் யூனிட்கள் விற்பனை செய்ய 5 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. இரண்டாவது தலைமுறை ஸ்விஃப்ட் 2010 வெளியாகி 2013 ஆம் ஆண்டில் 10 லட்சம் யூனிட் விற்பனையை தாண்டியது. அடுத்து, மூன்றாம் தலைமுறை ஸ்விஃப்ட் 2018-ல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதே ஆண்டில் 20 லட்சம் விற்பனை மைல்கல்லை தாண்டியது. மீதமுள்ள 5 லட்சம் அலகுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விற்பனை சாதனை பற்றி மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் (சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை) ஷாங்க் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், “மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஒவ்வொரு தலைமுறை இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்தமானகாக விளங்கும் நிலையில் 25 லட்சம் அல்லது 2.5 மில்லியனுக்கும் அதிகமான ஸ்விஃப்ட் பிரியர்களின் இதயங்களை வென்றுள்ளது. FY20-21 நிதி ஆண்டில் விற்பனையில் முதன்மையான கார் என்ற பெருமையுடன், ஸ்போர்ட்டிவ் ஸ்விஃப்ட் தோற்றம் மற்றும் செயல்திறனுடன் ஒரு புகழ்பெற்ற பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளது. அவர் மேலும் கூறுகையில், 35 வயதிற்குட்பட்ட 52% க்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் முதல் தேர்வாக ஸ்விஃப்ட் விளங்குகின்றது.
எங்கள் வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு இல்லாமல் நாங்கள் இந்த குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்திருக்க முடியாது.