
மிகவும் பிரபலமான சியரா எஸ்யூவி மாடலை நவீனத்துவமாக மாற்றி விற்பனைக்கு நவம்பர் 25ல் வெளியிட உள்ளதை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தற்பொழுது வரை வெளியான சில முக்கிய தகவல்கள் மற்றும் சோதனை ஓட்ட படங்களில் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
டாடா சியரா என்ஜின் எதிர்பார்ப்புகள்
ஹாரியர் மற்றும் சஃபாரி போன்றவற்றில் இடம்பெற்றிருக்கின்ற 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு 168bhp மற்றும் 350Nm டார்க்கை வெளிப்படுத்துவதுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் இடம்பெறலாம்.
குறிப்பாக பெட்ரோல் ரசிகர்களுக்கு டாடா சியரா மூலம் இரண்டு புதிய என்ஜின்களை கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதனால், இதன் விலை பட்ஜெட்டில் துவங்கலாம். புதிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் 168bhp மற்றும் 280Nm டார்க்கை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படும், குறைந்த விலைக்கு 1.5 லிட்டர் NA என்ஜினும் வரக்கூடும்.
சியராவின் பிரபலமான பின்புற ஜன்னல் வளைவு (signature rear window curve) கொடுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய அளவில் ரெட்ரோ மாடலை நினைவுப்படுத்துவதுடன், முன்பக்க கிரில் அமைப்பு வீல் ஆர்ச் என பலவற்றில் சிறப்பாக அமைந்துள்ளது.
இன்டீரியர் டேஸ்போர்டில் போட்டியாளர்களுக்கு இணையாக டாடா மோட்டார்ஸ் முதன்முறையாக இந்த காரின் மூலம் மிக அகலமான மூன்று ஸ்கீரின் செட்டப் கொடுக்கப்பட இருப்பது உறுதியாகியுள்ளது.
குறிப்பாக டாடாவின் புதிய செயல்திட்டங்களின் படி முதலில் மின்சார பவர்டிரெயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பதனால் சியரா.EV ஆனது ஹாரியர்.இவி மாடலில் இருந்த பேட்டரி மற்றும் மோட்டார்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
வழக்கம் போல டாடா மோட்டார்ஸ் தனது வலுவான கட்டுமானத்தை பாதுகாப்பு சார்ந்த கிராஷ் டெஸ்டில் நிரூபித்து வரும் நிலையில் இந்த முறையும் சியராவிலும் நிரூபிக்கலாம். அடிப்படை பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி டாப் வேரியண்டில் லெவல்-2 ADAS பெறக்கூடும்.
2025 நவம்பர் 25ல் விலை அறிவிக்கப்பட உள்ள சியரா ரூ.12 லட்சத்துக்குள் துவங்கலாம், கூடுதலாக 4X4 டிரைவ் எதிர்பார்ப்பதுடன் போட்டியாளர்களாக க்ரெட்டா, செல்டோஸ், எலிவேட், விக்டோரிஸ், கிராண்ட் விட்டாரா, XUV700, ஸ்கார்பியோ, வரவிருக்கும் டஸ்ட்டர், டெக்டான் போன்றவையும் உள்ளது.