
இந்தியாவின் மின்சார வாகன சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் மின்சார கார் டிசைனுக்கான காப்புரிமையை பெற்றுள்ளது.
இதன் மூலம் ஓலா நிறுவனம் இருசக்கர வாகனங்களிலிருந்து அடுத்த இலக்காக நான்கு சக்கர வாகன துறைக்குச் செல்லும் முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. காப்புரிமை பெற்ற படங்களின் அடிப்படையிலான டிசைனை நாம் பார்க்கும்பொழுது இந்த கார் ஐந்து கதவுகளை பெற்ற சிறிய டால்பாய் ஹேட்ச்பேக் வடிவில் இருக்கும் என தெரிகிறது. இதன் டிசைன் மிகச் சுருக்கமானதும் நகரப் பயணங்களுக்கு ஏற்றதுமானதுமாக உள்ளது.
முன்புறத்தில் தற்பொழுதுள்ள நவீன டிரென்டிங்குக்கு ஏற்ப எல்இடி லைட்டிங், ஏரோடினமிக் வடிவம் மற்றும் மின்சார வாகனங்களுக்கான டிசைனுடன் காணப்படுகின்றன. இந்த காரில் ஓலாவின் Gen-4 மாடுலர் பிளாட்ஃபார்மில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே பிளாட்ஃபார்மில் அவர்களின் மூன்று சக்கர மற்றும் எதிர்கால வாகனங்களும் உருவாகலாம்.
மேலும், “4680 Bharat Cells” பயன்படுத்தப்பட்டு உயர் திறன் பேட்டரிகளை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. தற்போது இருசக்கர வாகன துறையில் முன்னணி நிறுவனமாக இருப்பதால், இந்த காம்பேக்ட் மின்சார கார் இந்தியாவின் ₹8-10 லட்சம் விலைக்குள் உருவாக்கலாம் என்று வாகன நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சந்தையில் உள்ள சிறிய ரக கார்களான டாடா டியாகோ EV, எம்ஜி காமெட் EV மற்றும் வரவிருக்கும் வின்ஃபாஸ்ட் VF3 போன்ற கார்களை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
அதே வேளையில் விலை, ரேஞ்ச், பாதுகாப்பு மற்றும் சேவை நம்பகத்தன்மை ஆகியவை ஓலாவின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாகும். மொத்தத்தில், இந்த புதிய காம்பேக்ட் மின்சார கார் ஓலா எலெக்ட்ரிக்கின் “அடுத்த தலைமுறை நகர வாகன” கனவிற்கு தொடக்கமாக இருக்கலாம். எதிர்காலத்தில் இந்திய சாலைகளில் இதன் வடிவம் நிஜமாகுமா என்பதை பொறுத்திருந்து அறியலாம்.
தற்பொழுது ஓலா இருசக்கர வாகன சந்தையில் தொடர் விற்பனை சரிவு, சர்வீஸ் சிறப்பாக வழங்காத காரணத்தால் பல்வேறு சிக்கல்களுடன் சமீபத்தில், எல்ஜி நிறுவனத்தின் நுட்பத்தை பேட்டரி தயாரிக்க பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இதனை ஓலா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

