6 இருக்கை எம்ஜி ஹெக்டர் பிளஸ் அறிமுக விபரம் – ஆட்டோ எக்ஸ்போ 2020

8e1c5 mg hector suv

விற்பனையில் கிடைக்கின்ற பிரபலமான ஹெக்டர் காரை விட கூடுதலான வசதிகள் மற்றும் 6 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் காரை ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் வெளியிட எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவில் 14 கார்களை காட்சிப்படுத்த உள்ள எம்ஜி மோட்டார் நிறுவனம், இணையம், எலக்ட்ரிக் மற்றும் தானியங்கி கார் நுட்பங்கள் சார்ந்த மாடல்களை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்நிறுவனம், எம்பிவி விஷன்-ஐ கான்செப்ட் , குறைந்த விலை எலக்ட்ரிக் கார் மற்றும் மேக்சஸ் டி90 எஸ்யூவி மற்றும் ஹேட்ச்பேக் கார்களை காட்சிக்கு வைக்க உள்ளது. ஹெக்டர் பிளஸ் இந்நிறுவன வரிசையில் தனித்துவமான மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை வழங்குவதற்காக ஸ்டைலிங் மாற்றங்களையும் கொண்டிருக்கும்.

எம்.ஜி.யின் ஹெக்டர் பிளஸ் இரண்டாவது இருக்கைக்கு இரண்டு தனி கேப்டன் இருக்கையுடன், ஆர்ம்ரெஸ்டுகளுடன் ஆறு இருக்கைகள் கொண்ட மூன்று வரிசை கேபின் கிடைக்கும். ஹெக்டரை விட இன்டிரியரில் மாற்றங்கள் சிறிய அளவில் இருக்கும். குறிப்பாக மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தாராளமான இடவசதி மற்றும் சன் ரூஃப் ஆகியவற்றை பெறலாம்.

ஹெக்டரை விட தோற்ற அமைப்பில் மாறுபட்டதாக விளங்க, இதன் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்கு அமைப்பில் மாற்றங்களும், அதே நேரத்தில் முன்புற கிரில் அமைப்பு, புதிய வடிவத்திலான அலாய் வீல், மாற்றியமைக்கபட்ட டெயில் லேம்ப் பெற உள்ளது.

எம்ஜி ஹெக்டர் காரில் உள்ள அதே என்ஜின் ஆப்ஷனை பிஎஸ்6 முறையில் பெற உள்ளது. 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.

2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.

ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.

இந்த மாடல் டாடா ஹாரியர் மற்றும் 7 இருக்கை பெற உள்ள கிராவிட்டாஸ், XUV500 மற்றும் 7 இருக்கை பெற உள்ள கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

Exit mobile version