பிரசத்தி பெற்ற ஓலா நிறுவனம் இந்திய கால் டாக்ஸி சேவையில் மின்சாரத்தால் இயங்கும் கார்களை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றது. முதற்கட்டமாக தெலுங்கானா மாநிலத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஓலா மின்சார கால் டாக்ஸி

  • முன்னணி நகரங்களில் எலக்ட்ரிக் கார் டாக்ஸி சேவை தொடங்கப்பட உள்ளது.
  • இந்திய சந்தையில் எலக்ட்ரிக் கார்களுக்கான சந்தை மிதிப்பு மிக குறைவாகும்.
  • கடந்த 16-17 நிதி ஆண்டில் வெறும் 22,000 மின்சார கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது.

மிக வேகமாக வளர்ந்து வரும் கால் டாக்சி சந்தையில் பல்வேறு விதமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்ற ஓலா நிறுவனத்தின் அடுத்த முயற்சியாக தெலுங்கானா மாநிலத்தின் முன்னணி நகரங்கள் மற்றும் நாக்பூர் போன்றவற்றில் எலக்ட்ரிக் டாக்சி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளதாக ஓலா நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளது.

கார்கள் மட்டுமல்லாமல் மின்சார ரிக்ஷா போன்றவற்றையும் அறிமுகம் செய்யவும் அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளான சார்ஜ் செய்யும் நிலையங்களிலும் முதலீடு செய்ய ஓலா திட்டமிட்டு வருகின்றதாம்.

மின்சார கார்களின் கூடுதல் விலை , குறைந்த தொலைவு பயணம் போன்றவை இந்திய வாடிக்கையாளர்களை பெரிதும் கவராத நிலையில் மற்றொரு முக்கிய அம்சமாக பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பும் நிலையங்கள் உள்ளதை போன்று நாடு முழுவதும் மின்சார கார்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகள் பெரிய அளவில் கட்டமைக்கப்படாததும் முக்கிய காரணங்களிலே ஒன்றே ஆகும்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பது போன்றே மின்கலனில் இயங்கும் கார்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அரசு முன்னெடுக்கும் பட்சத்தில் மின்சார கார்களின் விற்பனையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் இ2ஓ பிளஸ் , வெரிட்டோ எலக்ட்ரிக் , சுப்ரோ எலக்ட்ரிக் வேன் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது. வால்வோ , பிஎம்டபிள்யூ போன்ற நிறுவனங்கள் உயர்ரக சொகுசு பிளக் இன் ஹைபிரிட் மாடல்களும் கிடைக்கின்றது.