இந்தியாவில் E20 பெட்ரோல் விற்பனைக்கு எதிராகவும் கூடுதலாக மாற்று ஆப்ஷனை எத்தனால் இல்லா பெட்ரோல் விற்பனை செய்யப்பட வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல் வாகனங்களுக்கான மிகப்பெரிய சாதகமான சூழ்நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக 2023 ஆம் ஆண்டுக்கு முந்தைய பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் என அனைத்து பெட்ரோல் வாகனங்களும் பெரும்பாலும் அதிகபட்சமாக 10 % எத்தனால் கலந்திருந்தால் என்ஜின் மைலேஜ், பாகங்கள் போன்றவற்றில் எந்த பாதுப்பும் ஏற்படாது. ஆனால் தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ள E20 பெட்ரோலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் பின் வருமாறு ;–
- 10-20 % மைலேஜ் இழப்பு
- என்ஜின் பாகங்கள், எரிபொருள் அமைப்பிற்கான குழாய், ரப்பர் ஹோஸ் மற்றும் ஓரிங் ஆகியவற்றில் ஏற்படுகின்ற அரிப்பின் பாதிப்பு
இந்த முக்கிய பாதிப்புகளால் வாகனங்களின் ஆயுட்காலம் வெகுவாக குறையும் அல்லது அடிக்கடி பழுது பார்க்க வேண்டியிருக்கும் என்பதனால் கூடுதல் சமையாகும்.
தற்பொழுது தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இத்தகைய திட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 இன் படி, தகவலறிந்த தேர்வு செய்யும் உரிமையை மீறுவதாகவும் மனுதாரர் கூறுகிறார்.
மனுவின்படி, E20 (20 சதவீத எத்தனாலுடன் கலந்த பெட்ரோல்) பயன்பாடு எரிபொருள் செயல்திறனை மோசமாக பாதிக்கிறது மற்றும் பல்வேறு வாகன கூறுகள் அரிப்புக்கு வழிவகுக்கும் மற்றும் நுகர்வோர் மீது கூடுதல் செலவுகள் மற்றும் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தக்கூடும்.
பெட்ரோலிய நிறுவனங்கள் எத்தனால் இல்லாத பெட்ரோலை சந்தையில் தொடர்ந்து கிடைக்கச் செய்வதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றத்திடம் வழிகாட்டுதல்களை இந்த பொதுநல மனு கோரியுள்ளது. கூடுதலாக, எரிபொருள் பம்புகளில் கலப்பு பெட்ரோல் E20 என்பதை தெளிவாகக் குறிக்க முறையான லேபிளிங் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். பெட்ரோல் 20 சதவீத எத்தனாலுடன் கலக்கப்பட்டாலும், அதன் விலை குறையவில்லை என்றும், எந்தவொரு செலவுப் பலன்களும் இறுதி நுகர்வோருக்கு வழங்கப்படவில்லை என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் எத்தனால் இல்லாத பெட்ரோல் இன்னும் கிடைக்கிறது, மேலும் கலப்பு எரிபொருள்கள் பெட்ரோல் நிலையங்களில் தெளிவான லேபிள்களுடன் வருகின்றன, இதனால் நுகர்வோர் தகவலறிந்த தேர்வு செய்யலாம், இது போன்று இந்தியாவில் செயல்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநல வழக்கு வெற்றி பெற்றால் கோடிக்கணக்கான மக்களின் வாகனங்கள் பாதுகாக்கப்படும், ஆனால் என்ன நடக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.