ஹூண்டாய் குழுமத்தின் 2025 CEO முதலீட்டாளர்கள் தினத்தில் பல்வேறு முக்கிய அறிவிப்புளை வெளியிட்டுள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டு இந்திய சந்தைக்கான எலக்ட்ரிக் எஸ்யூவி உள்நாட்டிலே வடிவமைக்கப்பட்டு, உதிரிபாகங்கள் என அனைத்தும் உள்நாட்டிலே பெறப்பட்ட மாடலை விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.
இது அனேகமாக இந்திய சந்தையில் கிடைக்கின்ற எக்ஸ்டர் மாடலை விட பிரீமியம் மற்றும் வெனியூ என இரண்டுக்கும் இடையிலான புதிய டிசைனை பெற்ற மின் வாகனமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதனால், இதற்கான பேட்டரியை எக்ஸைட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வழங்க வாய்ப்புள்ளது.
மாடல் குறித்தான தொழில்நுட்ப விபரங்கள் மற்றவற்றை தற்பொழுது அறிவிக்கவில்லை, குறிப்பாக இந்தியர்களுக்கான மாடலாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளதால் விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம், அதே நேரத்தில் ரேஞ்ச் 400 கிமீ-க்கு கூடுதலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் 2030க்குள் 18 ஹைபிரிட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, மேலும், தலேகான் புதிதாக மாற்றியமைக்கப்பட்டு வரும் ஆலையில் 2030க்குள் 2,50,000 லட்சம் உற்பத்தி எண்ணிக்கையை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்திய மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
ஹூண்டாய் 2027 முதல் ஒரு முறை சார்ஜ் செய்தால் 960 கிமீ க்கும் கூடுதலான தூரம் பயணிக்கக்கூடிய நீட்டிக்கப்பட்ட மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தையும் அறிவித்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தின் பிரீமியம் சொகுசு பிராண்ட் ஜெனிசிஸ் 2030க்குள் 15 நாடுகளில் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்திய வருகை குறித்து தெளிவுப்படுத்தவில்லை, ஆனால் முன்பாக ஹூண்டாய் இந்தியா ஜெனிசிஸ் பிராண்டை கொண்டு வர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.
வரும் அக்டோபர் 2025ல் நடைபெற உள்ள இந்தியா ஹூண்டாய் முதலீட்டாளர் கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகலாம்.