எதிர்காலத்தில் பெட்ரோல் எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரத்தை கொண்டு இயக்கப்படுகின்ற பேட்டரி வாகனங்கள் முக்கியத்துவம் பெற உள்ளதால் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் எலக்ட்ரிக் புல்லட் மாடலை களமிறக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் விற்பனை வருடத்திற்கு 49,944 ஆக இருந்த நிலையில், 2017 ஆம் ஆண்டின் முடிவில் 752,881 அலகுகள் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் மோட்டார் கொண்டு இயங்கும் வகையிலான இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் உட்பட வர்த்தக வாகனங்களும் தயாரிக்கப்பட உள்ளது. நீண்ட கால பாரம்பரியத்தை பெற்று விளங்கும் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் நிறுவனம், நிகழ்ந்து வருகின்ற மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், தனது நீண்ட கால பாரம்பரியத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையிலான இ-புல்லட் , கிளாசிக் போன்ற மாடல்களை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள பிஎஸ் 4 விதிகளுக்கு ஏற்ற மாடல்களின் அடிப்பையில் பிஎஸ் 6 எனப்படுகின்ற பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ற புதிய பிளாட்ஃபாரம் மோட்டார்சைக்கிள்கள் உட்பட எலக்ட்ரிக் வாகன பிளாட்பாரத்தையும் தொடர்ந்து உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவரால் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ட்வீன்ஸ் என்ற பெயரில் 650சிசி எஞ்சின் கொண்ட கான்டினென்டினல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகிய இரு மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக அலாய் வீல் மற்றும் டியூப்லெஸ் டயர் போன்றவற்றை பெற்ற தண்டர்பேர்டு X வரிசையில் தண்டர்பேர்டு 350x மற்றும் தண்டர்பேர்டு 500x ஆகிய இரு மாடல்களை வெளியிட்டிருந்தது.