ஃபோர்டு குஜராத்தில் முதலீடு செய்ய காரணம் என்ன ? – தமிழக அரசு

கியா மோட்டார்ஸ் லஞ்ச புகார் தொடர்பாக விளக்கமளித்திருந்த அறிக்கையின் வாயிலாக தமிழக அரசு ஃபோர்டு மோட்டார்ஸ் தொழிற்சாலை குஜராத் மாநிலத்தில் அமைய காரணம் போக்குவரத்து செலவுகளை கட்டுப்படுத்தவே முதலீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 Ford Endeavour SUV ride

ஃபோர்டு மோட்டார்ஸ்

ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலத்தில் 2012ல் செய்த முதலீடு
மேலும், ஃபோர்டு போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டிற்கு வெளியே தங்களது
முதலீடுகளை செய்வது தொடர்பான செய்திகள் குறித்த உண்மை நிலவரம் பின்வருமாறு:-
1. ஃபோர்டு தொழில் நிறுவனம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ4500 கோடி முதலீடு செய்து
5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்த தொழில் திட்டம்
ஆண்டுக்கு 2 முதல் 2.5 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.
2. இந்திய கார் சந்தை துரிதமாக வளர்ந்து வருவதால், ஃபோர்டு அதன் திறனை
அதிகரிக்க விரும்பியது. இந்தியாவின் 60ரூ க்கும் மேற்பட்ட கார் சந்தை வட இந்தியா
மற்றும் மேற்கு இந்தியாவில் உள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்பட்ட கார்கள்
மேற்கு மற்றும் வட இந்தியாவில் விற்பனைக்காக வாகனங்களைக் கொண்டு செல்ல
ஏற்படும் சரக்கு வாகன போக்குவரத்து செலவு ஆண்டொன்றுக்கு
சுமார் ரூ.70 கோடி கூடுதலாக இருப்பது மற்றும் குஜராத் போன்ற மற்ற மாநில அரசுகள்,
தமிழ் நாட்டில் வழங்கப்படுவதைப் போன்ற மதிப்புக் கூட்டு வரிச் சலுகைகளை
வழங்குவது ஆகிய காரணங்களினால் ஃபோர்டு நிறுவனம் குஜராத்தில் ஒரு புதிய
தளத்தில் உற்பத்தித் திட்டத்தினை தேர்ந்தெடுக்க வேண்டிய
கட்டாயத்தில் இருந்தது.
3. அதாவது, ஃபோர்டு நிறுவனம் தனது மூன்றாவது தொழில் திட்டத்தை அமைப்பதற்கு
குஜராத் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு போக்குவரத்து செலவு சிக்கனம், கார்
ஏற்றுமதிக்கு குஜராத் மாநிலத்திள்ள உள்ள துறைமுகம் வணிக ரீதியாக மிக உசிதமான
இடமாக கருதியது ஆகிய காரணங்களினால்தான் என்பதை, ஃபோர்டு நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் திரு மைக்கேல் போன்ஹேம் மாண்புமிகு முதல்வர் அவர்களை
20.01.2012 அன்று நேரில் சந்தித்த போது விளக்கியிருந்தார்.

மேலே குறிப்பிட்ட விவரங்கள், ஃபோர்டு நிறுவனம் குஜராத் மாநிலத்தில் 2012ல் நிறுவியது
அந்நிறுவனத்தின் ஒரு வணிக மற்றும் கொள்கை முடிவேயன்றி தமிழகத்தில் அத்திட்டம்
செயல்படுவதில் எந்த சிரமத்தினாலும் அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக்கப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதின் அனுகூலங்களைக் கருத்தில் கொண்டு சமீபத்தில்
ரூ.1300 கோடி முதலீட்டில் ஃபோர்டு நிறுவனம் ஒரு ஆராய்ச்சி மற்றும் வணிக மையம் ஒன்றை
சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில் நுட்ப சிறப்பு பொருளாதார பூங்காவில் நிறுவ கட்டுமானப்பணிகளைத் துவங்கியுள்ளது. இதில் 5000 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்க உள்ளது.

2016 Ford Endeavour SUV rear view

உலகளவில், ஃபோர்டு நிறுவனம், அமெரிக்க நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள மிகப் பெரிய
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (R&D) இதுவேயாகும். எல்காட் நிறுவனம் இந்த
திட்டத்திற்காக, அங்கு 28 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது.