இந்திய மோட்டார் சைக்கிள் தொடக்க கால வளர்ச்சி அத்தியாத்தில் களமிறங்கிய சரித்திர நாயகன் யமஹா RX100 இன்றைக்கும் , இந்திய சாலைகளில் உலா வருகின்ற ஆர்எக்ஸ்100 சப்தம் எங்கேயும் விநாடிகளில் திரும்பி பார்க்க வைக்கும் ஈர்ப்பினை கொண்டதாக விளங்குகின்றது.
இளைஞர்களின் மத்தியில் என்றைக்குமே, யமஹா நிறுவனத்தின் மீது ஒரு தீராத காதல் நிரந்தரமாகவே உள்ளது. இந்த காதலுக்கு முதல் அடிதளத்தை விதைத்த மாடல்தான் 2 ஸ்ட்ரோக் எஞ்சின் பெற்ற யமஹா RX100 பைக் மாடலாகும்.
களத்தில் யமஹா
1983 ஆம் ஆண்டு எஸ்கார்ட்ஸ் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஜப்பான் நாட்டின் யமஹா மோட்டார் நிறுவனம் வந்தடைந்த பிறகு ராஜ்டூட் 350 மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியா சுஸூகி-டிவிஎஸ் (Ind-Suzuki) கூட்டணியில் வெளிவந்த 100சிசி AX100 மாடலின் வெற்றி பெற்றதால், அதன் பிறகு யமஹா நிறுவனத்தின் ஜப்பான் ஆலையில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு வரலாற்று நாயகனாக யமஹா ஆர்எக்ஸ் 100 சந்தைக்கு வந்தடைந்தது.
ஆர்எக்ஸ் 100 எஞ்சின் நுட்பம் மற்றும் விபரம்
வேகம்
அதிகபட்சமாக மணிக்கு 110 கிமீ வேகத்தை சர்வசாதாரணமாகஎட்டும் வல்லமை கொண்ட ஆர்எக்ஸ்100 பைக்கின் ட்யூனிங் செய்யப்பட்ட மாடல் 0 முதல் 400 மீட்டர் தூரத்தை வெறும் 14 விநாடிகளில் கடந்து சாதனை படைத்தது.
\
கர்ஜனை
யமஹா RX100 பைக் வெளிப்படுத்துகின்ற கர்ஜனையை பற்றி சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை. புல்லட்களின் சப்த ஆதிக்கத்திற்கு மத்தியில் தன்னை தனி ஒருவனாக தனது செயல்திறன் மற்றும் கர்ஜனையால் நிலைநிறுத்திக் கொண்டது.
விளம்பரம்
Born to Lead” மற்றும் “Ahead of the 100 இரு கோஷங்களும் ஆர்எக்ஸ்100 பைக்கின் சிறப்பை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது என்றால் மறுப்பதற்கில்லை.
விலை
யமஹா RX100 பைக் விற்பனைக்கு சந்தையிலிருந்த பொழுது அதிகபட்சமாக ஆன்ரோடு விலை ரூபாய் 19,764 மட்டுமே ஆகும்.
நிறுத்தம்
1985 ஆம் ஆண்டு முதல் 1996 வரை சுமார் 11 ஆண்டுகள் எந்தவிதமான தோற்ற மாற்றங்களும் இல்லாமல் சந்தையை கலக்கி வந்த ஆர்எக்ஸ் 100 சுற்றுசூழல் பிரச்சனையின் காரணமாக 2 ஸ்ட்ரோக் எஞ்சின்களை கைவிட வேண்டிய கட்டாயத்தினால் சந்தையிலிருந்து ஆர்எக்ஸ்100 பைக்கின் உற்பத்தியை யமஹா நிறுத்தி விட்டது.
யமஹா ஆர்எக்ஸ்100 வதந்தி தெரியுமா ?
ஆர்எக்ஸ் 100 பைக் நிறுத்தப்பட்டதற்கு இன்றளவும் பலரிடம் ஒரு வதந்தியான தகவலே உள்ளது, என்னவென்றால் திருடர்கள் , செயின் பறிப்பு திருடர்கள் போன்றோர் அதிகமாக பயன்படுத்தியதனால் இந்த பைக்கின் உற்பத்தியை நிறுத்தியதாக பலரும் கருதுகின்றனர். ஆனால் உண்மையான காரணம் மாசு உமிழ்வு தர கட்டுப்பாடு அம்சங்களுக்கு ஏற்ற வகையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள தவறியதனால் யமஹா ஆர்எக்ஸ் 100 சந்தையிலிருந்து விடுவிக்கப்பட்டது.
மறுவிற்பனை
இன்றைக்கு யமஹா ஆர்எக்ஸ்100 பைக் வாங்க ஒரு லட்சம் வரை செலவு செய்யவும் பலர் தயாராக காத்திருக்கின்றனர் என்பதே உண்மையாகும்.