ரூ. 6,402 கோடி செலவில் சென்னை மாநகரில் மோனோ ரயில் திட்டம் 43.48 கி.மீட்டருக்கு இரு வழித்தடங்களில் செயல்படுத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை மோனோ ரயில்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்தபோது, சென்னையில் மோனோ ரயில் சேவை  செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கு, எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, பல மாநிலங்களில் மோனோ ரயில் திட்டம் தோல்வியடைந்துள்ளதால், இந்த திட்டத்தை நிரந்தரமாக கைவிட வலியுறுத்தி நிலையில் மோனோ ரயில் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தவதற்கான திட்ட கொள்கை விளக்கக் குறிப்பொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

ஆரம்பகட்டமாக சென்னையில் இரு வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்துக்கு  6 ஆயிரத்து 402 கோடி ரூபாய் செலவில் மோனோ ரயில் கொண்டு வரப்படும், எனவும் பொதுப் போக்குவரத்தை உயர்த்த, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் வழித்தடம் பூந்தமல்லி- கத்திரப்பாரா, போரூர்- வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் செயல்படுத்தப்படும், அதனை இரண்டாவது வழித்தடம் வண்டலூர்- வேளச்சேரி இடையே ரூ.3,135 கோடியில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் இன்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மின்சார பேருந்துகள்

சென்னை மாநகரத்தில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பேட்‌டரிகளின் மூலம் இயங்கும்‌ மின்சார பேருந்துகள் இயக்கப்படுமென போ‌க்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் இன்று தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மானியக்கோரிக்கை மீது இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர், மத்திய அரசு ‌அறிமுகம் செய்துள்ள புதிய வாகன கட்டுப்பாட்டுச் சட்டத்தை தமிழக அரசு மு‌ழுமையாக எதிர்ப்பதாகவும், அதில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசை‌ முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருதாகவும் குறிப்பிட்டார்.

சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட போக்குவரத்துத்துறை அறிவிப்புகளில் முக்கியமானவை பின் வருமாறு:

நீண்டதூரம் பயணிக்கும் அரசு குளிர்சாதன பேருந்துகளில் இலவச வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் கழிப்பறை வசதி எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்.

இரவு நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்து கழக பணிமனைகளில் ஏடிஎம் வசதி செய்து தரப்படும்.

அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிபடுத்த சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.

ஓய்வுபெற்றப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு 2 மாதத்தில் நிலுவை தொகை அதாவது செப்டம்பர் மாதத்திற்குள் ரூ.960 கோடி நிலுவை தொகை ஓய்வுபெற்றப் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 1,525 புதிய வழித்தடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன்ன, தமிழக போக்குவரத்து கழகங்களால் இயக்கப்படும் 20,776 வழித்தடங்கள் ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இணையதளம் வாயிலாக 51% பேர் பேருந்துகளை முன்பதிவு செய்கின்றனர்.

2016-17ல் தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக பேருந்து விபத்துக்களின் எண்ணிக்கை 1,209 ஆக அதிகரித்துள்ளது. 1,209 விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,373 பேர் என்று கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.