இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான டார்க் மோட்டார்சைக்கிள் ( Tork Motorcycles) நிறுவனத்தின் இந்தியாவின் முதல் டார்க் T6X (Tork T6X E-Bike) எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வருகின்ற பண்டிகை காலத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
24 பொறியியல் பட்டதாரிகளால் உருவாக்கப்பட்டுள்ள டார்க் மோட்டார்சைக்கிள் நிறுவனத்துக்கு நிதி உதவியை ஓலா செய்துள்ளது. இந்தியாவில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனமான டார்க் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனராக மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி கபில் (29) உள்ளார்.
125சிசி – 150 சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் சந்தையில் மிக சிறப்பான எலக்ட்ரிக் மாடலாக நிலைநிறுத்தப்பட உள்ள டி6எக்ஸ் எலக்ட்ரிக் பைக் உச்ச வேகம் மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கலாம். மேலும் டி6 எக்ஸ் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளள லித்தியம் ஐன் பேட்டரி ஒரு மணி நேரத்துக்குள்ளாக 80 சதவீத சார்ஜ் ஏறும் வசதி கொண்டதாக இருக்கும். ஒரு முறை முழுமையான சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை பயணிக்கும் வகையில்மிக சிறப்பான பேட்டரி திறனை பெற்றதாக டார்க் டி6எக்ஸ் விளங்கும் வகையில் உள்ள பேட்டரியின் ஆயுட்கால வாரண்டி 80,000 கிலோமீட்டர் முதல் 1,00,000 கிமீ வரை அல்லது 3 முதல் 5 வருடங்கள் தருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் டார்க் T6X பைக்கில் யூஎஸ்பி சார்ஜர் , ஆன்போர்டு நேவிகேஷன் ,ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆப்ஸ் தொடர்பு போன்றவற்றுடன் இந்த பைக்கில் ரைடிங் மோட்கள் இடம்பெற்றிருக்கலாம். இது தவிர ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் ஆன் வசதி மற்றும் ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனலாக தாமதமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
ஒரு கிலோமீட்டர் பயணிக்க ரூ 0.20 பைசா மட்டுமே எடுத்துக்கொள்ளும் என்பதனால் முழுமையான சார்ஜ் செய்வதற்கான கட்டண அளவு ரூ.15 -20 வரை மட்டுமே ஆகும். முதன்முறையாக புனேவில் இரு சார்ஜ் செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில வருடங்களில் நாடு முழுவதும் 100 மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
முதற்கட்டமாக டெல்லி , புனே மற்றும் பெங்களூரு நகரங்களிலும் அடுத்தகட்டமாக சென்னை , மும்பை , ஹைத்திராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் டீலர்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. டார்க் T6X பைக் விலை ரூ. 55000 முதல் ரூ.60,000 விலையில் அமைய வாய்ப்புகள் உள்ளது. அடுத்த இருமாதங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
புனே சக்கன் பகுதியில் அமைந்துள்ள ஆலையில் தயாரிக்கப்பட உள்ள டி6எக்ஸ் முதற்கட்டமாக 10,000 எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்ய இலக்கினை வகுத்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 60,000 பைக்குகளை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.