இனிய சம்பவங்களும் , சோகங்களும் என ஒன்றாக வழங்கி வந்த 2016 ஆம் ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் பல சவால்களையும் புதுமைகளையும் பெற்றதாகவே விளங்கி உள்ளது. நமது ஆட்டோமொபைல் சந்தையில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாகும்.
1. டீசல் கார் தடை நீக்கம்
டெல்லி , தேசிய தலைநகர் பகுதி மற்றும் கேரளா மாநிலத்திலும் விதிக்கப்பட்ட 2000சிசி மற்றும் அதற்க்கு மேற்பட்ட டீசல் கார் தடை இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை பெட்ரோல் மற்றும் மாற்று எரிபொருளை நோக்கி பயணிக்கும் ஆர்வத்தை அதிகரித்திருந்தாலும் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கோடிகள் முதல் சில ஆயிரம் கோடிகள் வரை பெருமளவிலான நஷ்டத்தை மஹிந்திரா , டொயோட்டா , டாடா மோட்டார்ஸ் ,மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற நிறுவனங்கள் சந்தித்தன.
டிசம்பர் 2015 முதல் ஆகஸ்ட் 12 , 2016 வரை நீடித்த இந்த தடை நீக்கப்பட்டு கூடுதலாக 1 சதவீத சுற்றுசூழல் வரியாக எக்ஸ்-ஷோரூம் விலையில் வசூலிக்கப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சில டீசல் கார் தடைகள் பற்றி
- 10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் கார்களை டெல்லியில் இயக்க தடை
- ஒற்றை இலக்க மற்றும் இரட்டை இலக்க எண்களின் அடிப்படையில் வாகனத்தை இயக்குதல்
- கனரக டீசல் வாகனங்கள் டெல்லி பகுதியில் நுழைய தடை
- மத்திய மற்றும் மாநில அரசுகள் டெல்லியில் டீசல் காரினை வாங்குவதனை தவிர்க்க வேண்டும்.
2. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ
கடந்த பிப்ரவரி 2016 யில் தொடங்கிய டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பல புதிய கார்கள் மற்றும் புதிய பைக்குகள் இந்திய சந்தைக்கு வரவுள்ளதை உறுதி செய்யும் வகையில் காட்சிக்கு வந்தது. பார்வைக்கு வந்த பெரும்பாலான கான்செப்ட் மற்றும் உற்பத்திநிலை கார்கள் மற்றும் பைக்குகள் சந்தைக்கு வர தொடங்கிவிட்டன.
3. பாதுகாப்பான கார்கள்
சர்வதேச கிராஷ் டெஸ்ட் சோதனை மையம் இந்தியாவில் விற்பனையில் உள்ள கார்களை பற்றி #SafecarsIndia என்ற பிரசாரத்தை கடந்த வருடம் முதலே தொடங்கியிருந்தாலும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என அவற்றை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தது.
4. வரி உயர்வு
2016-2017 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் கார்களின் என்ஜின் , நீளம் மற்றும் விலைக்கு ஏற்ப கூடுதல் வரிகள் சேர்க்கப்பட்டது. அதன் விபரம் …
- பெட்ரோல் ,எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள் 4 மீட்டருக்கு குறைவான நீளத்திலும் 1200சிசி என்ஜினுக்கு மிகாமலும் இருந்தால் கூடுதலாக 1 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது.
- டீசல் கார்களுக்கு 4 மீட்டருக்கு குறைவான நீளத்திலும் 1500சிசி என்ஜினுக்கு மிகாமலும் இருந்தால் கூடுதலாக 2.5 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது.
- 4 மீட்டர்களுக்கு மேலான கார்கள் மற்றும் எஸ்யூவிகள் மேலும் பெட்ரோல் 1200சிசி என்ஜினுக்கு மேலாக , டீசல் 1500சிசி என்ஜினுக்கு மேலாக இருந்தால் கூடுதலாக 4 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது.
- 10 லட்சம் விலைக்கு மேல் உள்ள கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களுக்கு கூடுதலாக 1 சதவீத வரி அதிகரிக்கப்பட்டது.
- மூன்று சக்கர வாகனங்கள் , மின்சார கார்கள் , ஹைட்ரஜன் கார்கள் , ஹைபிரிட் கார்கள் , ஆம்புலன்ஸ் மற்றும் டாக்சி வாகனமாக பதிவு செய்பவைகளுக்கு இந்த வரி உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி முறைக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளது.
5. மோட்டார் வாகனச் சட்டம்
ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துகளும் 1.50 லட்சத்துக்கு மேற்பட்ட உயிர்களை இழந்துவரும் இந்திய மோட்டார் வாகன சட்டம் மாற்றம் பெற்றது. பழைய மோட்டார் வாகனச் சட்டத்தில் கடுமையான புதிய விதிமுறைகள் சேர்க்கப்பட்டு அபாரதம் மற்றும் பிற விதிகளிலும் அதிகப்படியான மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய அபராத பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
6. சைரஸ் மிஸ்ட்ரி – டாடா குழுமம் மோதல்
இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் முக்கிய நிறுவனமாக விளங்கும் டாடா குழுமத்தின் தலைவர் பதவிலியிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மிஸ்த்ரி விவகாரம் இந்திய மட்டுமல்லாமல் பல நாடுகளின் கவனத்தை பெற்றது. ஒரு குழுமத்தின் தலைவர் எவ்விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் அதிரடியாக நீக்கப்பட்டார். மஸ்ட்ரி டாடாவின் ஆட்டோமொபைல் துறையில் மிகுந்த பங்களிப்பினை வழங்கியதோடு டியாகோ , ஹெக்ஸா போன்ற கார்களுக்கு அடிகோடிட்டார் என்பது நிதர்னமாகும். மேலும் ரத்தன் டாடா அவர்களின் கனவு காரான நானோ காரை நீக்க வேண்டும் என கூறியதாகவும் , நிறுவனத்துக்கு தீங்கு இழைத்ததாலும் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ரத்தன் டாடா , குழுமத்தின் இடைக்கால தலைவரானார்.
7. கருப்புப்பணம்
கடந்த நவம்பர் 8 , 2016யில் முதல் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூயாய் 500 , 1000 நோட்டுகளால் ஒட்டுமொத்த இந்திய ஆட்டோமொபைல் துறையே மாபெரும் சரிவினை கண்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் மிகப்பெரும் சவாலை வாகன துறை சந்தித்துள்ளது. குறிப்பாக சொகுசு கார் சந்தை மற்றும் கனரக வாகனங்கள் சந்தையும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது.