பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப தரம் உயர்த்தப்பட்ட மாருதி சுசுகி ஈக்கோ

0

மாருதி சுசூகி ஈக்கோ

பிரபலமான ஆம்னி வேன் விற்பனை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து மாருதி ஈக்கோ விற்பனை எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஈக்கோ வேனின் தரம் உயர்த்தப்பட்டு ரூ.6,000 முதல் ரூ.9,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Google News

கடந்த ஏப்ரல் மாதம் அடிப்படையாக இணைக்கப்பட்ட ஏபிஎஸ், இபிடி உட்பட ஏர்பேக் மற்றும் ஸ்பீடு வார்னிங் போன்றவற்றுடன், அக்டோபரில் நடைமுறைக்கு வந்துள்ள கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ப இந்த மாடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 4 மாசு உமிழ்வுக்கு இணையான ஈக்கோ காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி அல்லது பெட்ரோல் மாடல்களில் விற்பனைக்கு இருக்கிறது.  பெட்ரோல் வேரியன்ட் அதிகபட்சமாக 73 எச்பி பவரையும், 101 என்எம் டார்க் வழங்குகிறது.. சிஎன்ஜி மாடலில் இருக்கும் இதே என்ஜின் அதிகபட்சமாக 63 எச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற ஈக்கோவில் , புதிய வசதிகளாக  இபிடி ஆதரவு பெற்ற ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, அதிவேகத்தை எச்சரிக்கும் கருவி கொடுக்கப்பட்டுள்ளன.

டாக்ஸி ரக டூர் வி மாடல் முதல் அனைத்து வேரியன்டிலும் நிரந்தர அம்சமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாருதி ஈக்கோ காரின் ஆரம்ப விலை ரூபாய் 3.61 லட்சம் முதல் ரூ.6.61 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) ஆகும். ஏப்ரல் 2020க்குள் இந்த மாடலும் பிஎஸ் 6 விதிகளுக்கு மாற்றப்பட உள்ளது.