எலக்ட்ரிக் மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ வரலாம்..!

மஹிந்திரா நிறுவனம் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்திய எஸ்யூவி கூபே ரக மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ கான்செப்ட் மாடலை மின்சாரத்தில் இயங்கும் காராக அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றது.

மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ எலக்ட்ரிக்

இந்தியாவின் முன்னணி யுட்டிலிட்டி தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனத்தின் எலக்ட்ரிக் பரிவு எதிர்காலத்தை நோக்கிய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற நிலையில் 300 கிமீ தூரம் பயணிக்கும் வகையிலான மின்சார பேட்டரிகள் மற்றும் செயல்திறன் மிக்க எஸ்யூவிகளை களமிறக்க திட்டமிட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்திய கூபே ரகத்திலான எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலை அடிப்படையாக கொண்ட XUV ஏரோ கான்செப்ட் காரை அதிக திறன் கொண்ட மின்சாரத்தில் இயங்கும் வகையிலான மாடலாக வடிவமைப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருவதாக மஹிந்திரா & மஹிந்திரா சேர்மென் பவன் குன்கா தெரிவித்துள்ளார்.

தற்பொழுது மஹிந்திரா நிறுவனம் தொடக்கநிலை மாடல்களாக மின்சாரத்தில் இயங்கும் இ2ஓ பிளஸ், இவெரிட்டோ, இசுப்ரோ வேன் போன்றவற்றை 48V மற்றும் 72V பிரிவுகளில் விற்பனை செய்து வருகின்றது. இதை தவிர பெர்ஃபாமென்ஸ் ரக 380V  திறன் கொண்ட மின்சார பேட்டரிகளை உருவாக்கும் நோக்கில் ஆய்வுகளை தொடங்கியுள்ளது.

தனது அடுத்த எலக்ட்ரிக் மாடல்களை 41 ஹெச்பி முதல் 204 ஹெச்பி வரையிலான ஆற்றல் வகையில் தயாரிக்கவும், அதிகபட்சமாக 250 கிமீ முதல் 350 கிமீ வரையிலான தொலைவு பயணிக்கும் மின்கலன்களை உருவாக்கவும், அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தை எட்டும் திறனுடன், 0 முதல் 60 கிமீ வேகத்தை 4.5 விநாடிகளுக்குள் எட்டும் வகையிலான திறன் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகின்றது.

Recommended For You