ஃப்ளெக்ஸ்-என்ஜின்இந்திய மோட்டார் சந்தையில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக, மின்சார வாகனங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஃப்ளெக்ஸ்-என்ஜின் பெற்ற பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பிடிஐ-க்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

ஃப்ளெக்ஸ்-என்ஜின்

ஃப்ளெக்ஸ் எரிபொருள் அல்லது இரட்டை எரிபொருள் முறை கொண்டு இயங்கும் வகையிலான இருசக்கர வாகனங்களை இந்தியாவின்  இரு மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர்கள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஃப்ளெக்ஸ்-என்ஜின் என்றால் என்ன ?

ஃப்ளெக்ஸ்-என்ஜின் எனப்படுவது, ஃப்ளெக்ஸ் எரிபொருள் அல்லது இரட்டை எரிபொருள் கொண்டு இயக்கப்படும் எஞ்சின் ஆகும். குறிப்பாக பெட்ரோல் மற்றும் எத்தனால் கொண்டு இயங்கும் வகையிலான பைக்குகள் ஆகும்.

இது போன்ற பைக்குகளை இந்தியாவின் இரு வாகன தயாரிப்பாளர்கள் உற்பத்தி நிலைக்கு கொண்டு சென்றுள்ளதால், மிக விரைவில் என அமைச்சர் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆட்டோ எக்ஸ்போ 2018 அரங்கில் இந்த வாகனங்கள் காட்சிக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் அவர் கூறுகையில் முழுமையாக இந்த பைக்குகள் 100 சதவீதம் பெட்ரோல் மற்றும் 100 சதவீதம் எத்தனால் என இரண்டிலும் இயங்கும் என்பதனால், தற்போது இந்தியா ஆண்டிற்கு ரூபாய் 7 லட்சம் கோடி மதிப்பிலான விலையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கச்சா எண்ணெய் செலவு, நம் நாட்டிலே எத்தனால் உற்பத்தி செய்யப்படும் என்பதனால் ரூபாய் 2 லட்சம் கோடி வரை சேமிக்க உதவும் ” என நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

கோதுமை வைக்கோல், நெல் வைக்கோல், மூங்கில் போன்ற பொருட்களை கொண்டு எத்தனால் தயாரிக்கப்படும் என்பதனால், ஒரு டன் நெற் வைக்கோலை கொண்டு 280 லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய இயலும், மேலும் எத்தனால் ஒரு பெட்ரோல் விலையை , விட பாதியாக இருக்கும் என்பதனால் பயனாளர்களுக்கும் ஏற்றதாக அமைந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் கனடா போன்ற நாடுகளில் எத்தனால் கொண்டு இயக்கப்படுகின்ற வாகனங்களை பென்ஸ், பிஎம்டபிள்யூ, டொயோட்டா, ஃபோர்டு ஆகிய நிறுவனங்கள் விற்பனை செய்து வரும் நிலையில் இந்தியாவிலும் இதுபோன்ற திட்டத்தை செயற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் காலத்தில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களுக்கு மாற்றாக மின்சாரம், எத்தனால், மெத்தனால், பையோ-டீசல் மற்றும் சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்கள் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.