100சிசி பைக்குகள் சந்தையிலிருந்து முற்றிலும் மறையலாம்

தொடக்கநிலை சந்தையில் உள்ள 100சிசி மற்றும் 110சிசி எஞ்சின் பெற்ற மாடல்கள் விற்பனையை விட ஸ்கூட்டர் சந்தை நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருவதனை சியாம் விற்பனை அறிக்கை தெளிவுப்படுத்துகின்றது.

100-110சிசி பைக்குகள்

தொட்டகநிலை 100சிசி மற்றும் 110சிசி மோட்டார்சைக்கிள் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை தவிர மற்ற எந்த நிறுவனமும் சிறப்பான பங்களிப்பினை பெறவில்லை. ஆனால் ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் ஒட்டுமொத்த ஸ்கூட்டர் விற்பனையில் 110சிசி சந்தையில் அபரிதமான பங்களிப்பினை பெற்று 60 சதவிகித பங்களிப்பை பெற்றுள்ளது.

ஆனால், 100-110சிசி வரையிலான மோட்டார்சைக்கிள் பிரிவில் ஹோண்டா நிறுவனம் களமிறக்கிய எந்த மாடலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடக்கநிலை மோட்டார் சைக்கிள் சந்தையில் ஸ்பிளென்ட்ர், HF டீலக்ஸ், பஜாஜ் சிடி100 மாடல்கள் தொடர்ந்து சிறப்பான வரவேற்பினை பெற்றிருந்தாலும் ஸ்கூட்டர் விற்பனையை நெருங்குவதில் பின்தங்கியே உள்ளது.

பஜாஜ் தவிர மற்ற மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளர்களான ஹோண்டா, டிவிஎஸ், யமஹா, சுசுகி உள்ளிட்ட நிறுவனங்கள் அமோக வளர்ச்சியை ஸ்கூட்டர் சந்தையில் பெற்று வருகின்றது. இதனை கருத்தில் கொண்டே நாட்டின் முன்னணி ஹீரோ நிறுவனம் மூன்று ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

மேலும் யமஹா நிறுவனம் புதிய 110சிசி அல்லது 125சிசி ஸ்கூட்டர் மாடலை விரைவில் வெளியிட உள்ளது. அதே போல ஹோண்டா நிறுவனம் கிளிக் ஸ்கூட்டரை சமீபத்தில் வெளியிட்டிருக்கின்றது. பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் எந்தவிதமான மாடல்களை களமிறக்கும் நோக்கத்தில் இல்லை என்றே தெரிகின்றது.

ஆனால், எந்தவொரு மோட்டார்சைக்கிள் நிறுவனமும் 100சிசி சந்தையில் புதிய பைக் மாடல்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

Recommended For You