இந்திய பயணிகள் வாகன சந்தையில் முடிந்த செப்டம்பர் 2025 மாதத்தில் ஒட்டுமொத்தமாகச் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த மாதத்தில் மொத்தமாக 3,78,453 யூனிட்கள் விற்பனையாகி உள்ளன. இது, கடந்த ஆண்டு செப்டம்பர் 2024-இல் விற்ற 3,58,884 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 5.5% வளர்ச்சி ஆகும்.
இருப்பினும், இந்தக் கூட்டு வளர்ச்சிக்குப் பின்னால் பல்வேறு நிறுவனங்களின் விற்பனை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. முன்னிலை வகிக்கும் நிறுவனங்களின் செயல்பாடு சந்தையில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வரும் மாருதி சுசூகி, இந்த மாதமும் முதலிடத்தில் உள்ளது.
சரிவில் மாருதி சுசூகி
மாருதி 1,32,820 யூனிட்கள் விற்றுள்ளது, இது கடந்த ஆண்டை விட 8.4% (1,44,962) குறைவு ஆகும். மாருதி சந்தித்த இந்த பின்னடைவைக் கைப்பற்றும் வகையில், மற்ற முன்னணி நிறுவனங்கள் டாடா, மஹிந்திரா வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 59,667 யூனிட்களை விற்று பிரம்மாண்டமான 45.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக டாடாவின் நெக்ஸான் டெலிவரி 22,250 யூனிட்டுகளாகும். இதில் எலக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை 9,191
மஹிந்திரா 56,233 யூனிட்களை விற்று, 10.1% வளர்ச்சியுடன் தனது SUV பிரிவில் வலுவாக முன்னேறியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் கடந்த வருடம் இதே மாதம் இரண்டாமிடத்தில் இருந்தது ஆனால் தற்பொழுது சரிந்து நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 51,547 யூனிட்களை விற்று 0.9% என்ற சிறிய, நிலையான உயர்வைப் பதிவு செய்துள்ளது.
செப்டம்பர் 2025 விற்பனைப் பட்டியலில் மிகவும் கவனத்தை ஈர்த்தது ஸ்கோடா நிறுவனம் தான் 6,636 யூனிட்களை விற்று, யாரும் எதிர்பாராத வகையில் 100.6% அபார வளர்ச்சியைப் பதிவு செய்து, மாத விற்பனைப் பட்டியலில் சாதனை படைத்துள்ளது.
இதேபோல், மற்ற சில நிறுவனங்களும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளன: எம்.ஜி. மோட்டாரின் விற்பனை 6,728 யூனிட்களை விற்று 46.6% வளர்ச்சியை எட்டியுள்ளது. ரெனால்ட் இந்தியா 4,265 யூனிட்களை விற்று 32.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. டொயோட்டா 27,089 யூனிட்களை விற்று 13.8% வளர்ச்சியுடன் தனது சந்தை நிலையை உயர்த்தியுள்ளது.
இருப்பினும், சில நிறுவனங்கள் சரிவைச் சந்தித்துள்ளவற்றில் முதலாவதாக கியா இந்தியா செப்ட்ம்பர் 20225ல் 22,700 யூனிட்களை விற்று 3.5% குறைவைப் பதிவு செய்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் 5,305 யூனிட்களை விற்று 6.5% வீழ்ச்சியைக் கண்டுள்ளது. வோல்க்ஸ்வேகன் (-18.1%), நிசான் (-21.8%), மற்றும் ஜீப் (-18.6%) ஆகிய நிறுவனங்களின் விற்பனை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது, இது அவர்களுக்கு ஒரு சவாலான காலமாக அமைந்துள்ளது.
முழுமையான அட்டவனையை கீழே வழங்கப்பட்டுள்ளது.
OEM | September 2025 | September 2024 | Growth |
---|---|---|---|
மாருதி சுசூகி | 132820 | 144962 | -8.4% |
டாடா | 59667 | 41063 | 45.3% |
மஹிந்திரா | 56233 | 51062 | 10.1% |
ஹூண்டாய் | 51547 | 51101 | 0.9% |
டொயோட்டா | 27089 | 23802 | 13.8% |
கியா | 22700 | 23523 | -3.5% |
எம்ஜி | 6728 | 4588 | 46.6% |
ஸ்கோடா | 6636 | 3308 | 100.6% |
ஹோண்டா | 5305 | 5675 | -6.5% |
ரெனால்ட் | 4265 | 3217 | 32.6% |
ஃபோக்ஸ்வேகன் | 2780 | 3394 | -18.1% |
நிசான் | 1652 | 2113 | -21.8% |
சிட்ரோயன் | 734 | 711 | 3.2% |
ஜீப் | 297 | 365 | -18.6% |
Total | 378453 | 358884 | 5.5% |