பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான சிம்பிள் எனர்ஜி (Simple Energy), மிக முக்கியமான ஒரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பை அறிவித்துள்ளது. அரிதான காந்தங்கள் (Rare Earth Magnets) இல்லாமல், உள்நாட்டிலேயே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய மோட்டாரை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
மேக் இன் இந்தியா
மின்சார வாகன மோட்டார்களில் அரிதான காந்தங்கள் முக்கியமானவை. இவை மோட்டார்களின் செயல்திறனை (Performance) மற்றும் டார்க் (Torque) திறனை அதிகரிக்கும். ஆனால், இந்த காந்தங்களுக்காக இந்தியா பெரும்பாலும் சீனாவையே நம்பியுள்ளது. சமீபத்தில் சீனா விதித்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் பஜாஜ் மற்றும் டிவிஎஸ் போன்ற பல நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதால், உள்நாட்டு மோட்டார் தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் அரிய வகை காந்தம் இல்லா மோட்டாரை சங்கல்ப் 2025யில் காட்சிப்படுத்தியது.
சிம்பிள் எனர்ஜியின் புதிய கண்டுபிடிப்பு
இந்தச் சவாலை சமாளிக்கும் விதமாக, சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அரிதான காந்தங்கள் இல்லாத மோட்டாரை உருவாக்கியுள்ளது. இந்த மோட்டார் அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டதுடன், அதே அளவு செயல்திறன் மற்றும் டார்க் வழங்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மோட்டாருக்குத் தேவையான பிரத்யேக மென்பொருள் அல்காரிதத்தையும் (Software Algorithm) அவர்களே உருவாக்கியுள்ளனர்.
எதிர்காலத் திட்டங்கள்
தற்போது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 248கிமீ ரேஞ்ச் வழங்கும் சிம்பிள் One மற்றும் 181கிமீ ரேஞ்சு Simple One S ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், டீலர்களை விரிவுப்படுத்தி வரும் நிலையில் அதன் ஓசூரில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய மோட்டார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், அடுத்த சில ஆண்டுகளில் டீலர்களை விரிவுபடுத்தி, 2027-க்குள் ஐபிஓ (IPO) வெளியிடவும் தயாராகி வருகிறது.