இந்திய சந்தையில் யமஹா நிறுவனம் பிரிமீயம் பைக் மாடல்களான ஃபேரிங் ஸ்டைலினை பெற்ற R3 மற்றும் நேக்டூ ஸ்ட்ரீட் ஃபைட்டர் MT-03 பைக் என இரண்டினையும் அறிமுகம் செய்ய உள்ள நிலையில் சில டீலர்கள் இரு மாடல்களுக்கும் முன்பதிவினை துவங்கியுள்ளனர்.

அடுத்த சில மாதங்களுக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் ஆர்3 மற்றும் எம்டி-03 பைக்குகளுக்கு இந்தியா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட யமஹா டீலர்கள் மூலம் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவுகளை தொடங்கியுள்ளனர். டீலர்ஷிப்பை பொறுத்து முன்பதிவு கட்டணம் ரூ.5,000 முதல் 20,000 வரை வசூலிக்கப்படுகின்றது.

2023 Yamaha MT-03

சமீபத்தில் டீலர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வில் யமஹா R3, R7, R1M, MT-03,MT-07 மற்றும் MT-09 என மொத்தம் 6 பிரீமியம் பைக்குகள் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இந்த பைக்குகளில் முதற்கட்டமாக யமஹா ஆர்3 மற்றும் எம்டி-03 என இரண்டும் வரவுள்ளது.

இரு பைக் மாடல்களும் என்ஜின் உட்பட பொதுவாக பல்வேறு பாகங்களை பகிர்ந்து கொண்டாலும் ஆர்3 மாடல் முழுமையாக ஃபேரிங் செய்யப்பட்டதாகவும், எம்டி-03 நேக்டூ மாடலாக விளங்குகின்றது.

இரண்டு மாடலும்  DOHC அமைப்புடன் பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் 321cc அதிகபட்சமாக 10,750 RPM-ல் 42 PS குதிரைத்திறன் மற்றும் 9,000 Rpm-ல் 29.6 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

டயமண்ட் பிரேம் சேஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ஃபேரிங் ரக மாடல் 130 மிமீ பயணிக்கும் வகையில் 37 மிமீ USD ஃபோர்க், 120 மிமீ பயணிக்கும் மோனோ ஷாக் மற்றும் முன் மற்றும் பின்புறத்தில் முறையே 298 மிமீ டிஸ்க் மற்றும் 220 மிமீ  டிஸ்க் பிரேக் பெற்று டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றிருக்கும்.

யமஹா R3 பைக்கிற்கு போட்டியாக இந்திய சந்தையில் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அப்பாச்சி RR 310R, கீவே K300 R கவாஸாகி நின்ஜா 400 ஆகியவற்றை எதிர்கொள்ளும்.

அடுத்தப்படியாக, யமஹா MT-03 பைக்கிற்கு சவாலாக பிஎம்டபிள்யூ G310 R, கேடிஎம் 390 டியூக், மற்றும் கீவே K300 N போன்றவை இடம்பெறுள்ளது.