விரைவில்.., ஹீரோ டூயட் இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியாகிறது

duet-e

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் டூயட் இ கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது.

விற்பனையில் கிடைத்த வருகின்ற டூயட் பெட்ரோல் ஸ்கூட்டரின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்பட்ட டூயட் இ எல்க்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்சு 65 கிமீ ஆக இருக்கும். மேலும் 0- 60 கிமீ வேகத்தை 6.5 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சந்தையில் தற்போதைய சூழல் மாறியுள்ளது. எனவே, இந்த ரேஞ்சு மற்றும் திறன் அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வெளியாகக்கூடும்.

சமீபத்தில் வெளியான பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 95 கிமீ ரேஞ்சுடன், டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டர் 75 கிமீ ரேஞ்சு மற்றும் பிரபலமான ஏத்தர் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 85 கிமீ ரேஞ்சை பெற்றுள்ளது. எனவே, இந்த மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையிலும், பென்லிங் ஆரா, ஒகினாவா ஐ பிரைஸ் போன்ற மாடல்களை எதிர்கொள்ளும் வகையிலும் ஹீரோ மோட்டோகார்ப் எலெக்ட்ரிக் மாடல் வெளியாகும்.

மேலும் ஏத்தர் எணர்ஜி நிறுவனத்தில் 30 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள ஹீரோ மோட்டோகார்ப் இந்நிறுவனத்தின் நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சமீபத்தில் வெளியான ஏதெர் 450 எக்ஸ் மாடலின் நுட்பங்ளை டூயட் இ-ஸ்கூட்டர் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மற்றொரு சவாலும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துக்கு உள்ளது. குறிப்பாக ஹீரோ எலெக்ட்ரிக் பிராண்டு பெயர் ஹீரோவின் முஞ்சால் குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்ட குடும்பத்திற்கு இடையிலான ஒப்பந்தத்தில் இந்த பெயரினை ஹீரோ மோட்டோகார்ப் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் எங்களுடைய எலெக்ட்ரிக் வாகன திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். மேலும் புதிய பிராண்டு அல்லது மற்ற நுட்ப விபரங்கள் அறிமுகத்திற்கு முன்பாக வெளியிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

உதவி – moneycontrol.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *