பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கார்களின் விற்பனையும் சந்தையில் சரிவை சந்தித்து வருகிறது.ஜூலை மாத இறுதியில் 78 ரூபாய்க்கு விற்பனையான பெட்ரோல் தற்போது 87 ரூபாயாகவும், டீசல் 71ல் இருந்து 80 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால், நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கார் வாங்க தயக்கம் காட்டுவது, முன்னணி கார் நிறுவனங்களின் விற்பனை விவரம் மூலம் உறுதி செய்ய முடிகிறது.
ஹோண்டா கார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 17 ஆயிரத்து 365 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 17 ஆயிரத்து 20 கார்களை விற்பனை செய்துள்ளது, இது 2 சதவீதம் வீழ்ச்சியாகும். அதே சமயம், கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் 18 ஆயிரத்து 257 கார்களை விற்பனை செய்த ஹோண்டா நிறுவனம் இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் 14 ஆயிரத்து 820 கார்களையே விற்பனை செய்துள்ளது. இதில் 20 சதவிகித வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்ட மாருதி நிறுவனம் கடந்த இரண்டு மாதங்களாக கார் விற்பனையில் 1.4 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாதத்திற்கு சுமார் 3 லட்சம் கார்கள் விற்பனையாகும் இந்தியாவில், பெட்ரோல் டீசலின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கருதுகின்றனர் விற்பனையாளர்கள். பெட்ரோலை விட விலை குறைந்ததாக இருந்த டீசலின் பயன்பாடு கொண்ட கார்களே நடுத்தரக் குடும்பத்தின் தேர்வாக இருந்தது. தற்போது, டீசல் விலையேற்றத்தால் டீசல் காரின் மவுசும் வாடிக்கையாளர் மத்தியில் சரிந்துள்ளது.
பெட்ரோல் விலை 100 ரூபாயை கடக்கும் என துறை சார்ந்தவர்கள் கணித்து வரும் நிலையில், வழக்கத்திற்கு மாறாக, பட்ஜெட் கார்களில் 61 சதவீதம் பெட்ரோல் கார்களும், 39 சதவிகித டீசல் கார்களுமே விற்பனையாவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. மேலூம் சரிவிலிருந்து கார் சந்தை மீளுமா என்ற கேள்வியே எழுகிறது.