இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற சிட்ரோன் பயணிகள் வாகன தயாரிப்பாளரின் முதல் காம்பெக்ட் எஸ்யூவி காராக C3 அறிமுகம் செய்யபட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் சி3 விற்பனைக்கு கிடைக்க உள்ளது.
சென்னை அருகே அமைந்துள்ள திருவள்ளூர் ஆலையில், கார் உற்பத்தி நடப்பு ஆண்டு டிசம்பர் முதல் தொடங்க உள்ளது. C3 அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, சிட்ரோன் இந்தியாவில் அதன் டீலர் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களில் La Maison ஷோரூம்களை திறந்துள்ளது. பிரத்யேக ஆன்லைன் விற்பனை தளத்தையும் துவங்கவுள்ளது.
சிட்ரோன் C3 எஸ்யூவி
90 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுவதனால் சி3 எஸ்யூவி காரின் விலை சவாலாகவும், இந்திய சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவிகளுக்கு கடுமையான சவாலினை ஏற்படுத்த உள்ளது.
Common Modular Platform (CMP) என்ற பிளாட்ஃபாரத்தில் வளரும் சந்தைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள சி3 எஸ்யூவி காரில் 100 bhp மற்றும் 160 Nm டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டு 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்கும். மற்றபடி, இந்த காரில் டீசல் இன்ஜின் பொருத்தப்பட வாய்ப்பில்லை.
C3 காரின் இன்ஜின் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஃப்ளெக்ஸ் ஃபியூயல் எஞ்சினைப் பெறும் இந்தியாவின் முதல் காராக விளங்கும். இது பெட்ரோல் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருளை கொண்டு இயங்கும் திறன் பெற்றிருக்கும். பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நேரத்தில், ஃப்ளெக்ஸ்-ஃபியூயல் எஞ்சின் கொண்ட ஒரு எஸ்யூவி வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேற்பினை பெறலாம்.
ஒன்றிய அரசின் திட்ட வரைவுப்படி, 2022 ஆம் ஆண்டுக்குள் 10% எத்தனால் கலவை அடையவும், 2030 ஆம் ஆண்டிற்குள் அதை இரட்டிப்பாக்கவும் திட்டமிட்டுள்ளது.
டிசைன் அம்சங்கள்
இந்நிறுவனத்தின் பாரம்பரியமான டிசைன் அமைப்பினை பெற்ற பம்பர், லோகோ உடன் மிக நேர்த்தியான பானெட் அமைப்பு வழங்கப்பட்டு, உயரமான வீல் ஆர்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கிராஸ்ஓவர் ஸ்டைல் கார்களை போல அமைந்துள்ள சி3 காரில் 10 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பு வழங்கப்பட உள்ளது.
C3 மாடலில் ஒற்றை நிறம் மற்றும் டூயல் டோன் விருப்பங்களில் கிடைக்கும். டூயல் டோனில் ஏ, பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு நிறமாக இருக்கும். கூடுதலாக, சிட்ரோன் கஸ்டமைஸ் விருப்பங்களை வழங்க உள்ளது.