வரும் ஜூலை 4, 2023-ல் கியா மோட்டார் நிறுவனத்தின் மேம்பட்ட செல்டோஸ் எஸ்யூவி வெளியாக உள்ள நிலையில் டீசரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாத துவக்கத்தில் விற்பனைக்கு கிடைக்க துவங்கலாம்.
செல்டோஸ் காரின் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இடம்பெறாது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினுடன் கூடுதலாக புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை பெற உள்ளது.
2023 Kia Seltos Facelift
வெளிநாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற கியா செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் அடிப்படையில் மாற்றங்களை பெற்றதாக வரவுள்ள காரில் புதுப்பிக்கப்பட்ட எல்இடி ஹெட்லைட், ரன்னிங் விளக்குகள், முன் பம்பர், அதிக பாடி கிளாடிங் மற்றும் கூடுதல் பாடி-கலர் இன்செர்ட்டுகளை, பனி விளக்கு ஹவுஸிங்கில் பெறுகிறது.
பக்கவாட்டில் பெரிதாக மாற்றமில்லை, பின்புறத்தில் டெயில் லைட், பம்பர் ஆகியவற்றை மேம்படுத்தியிருக்கலாம்.
இன்டிரியரில், கியா செல்டோஸ் புதுப்பிக்கப்பட்ட டாஷ்போர்டு டிசைன், மற்ற அம்சங்களைப் பொறுத்தவரை, செல்டோஸ் ஃபேஸ்லிஃப்ட் பனோரமிக் சன்ரூஃப், புதிய இரட்டை பிரிவு கொண்ட டிஸ்பிளே அமைப்பு, ADAS பாதுகாப்பு அம்சம், டூயல்-ஜோன் ஏசி கட்டுப்பாடு மற்றும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ரியாட் ஆட்டோ புதுப்பிக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் திரையுடன் வரக்கூடும்.
1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.
இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும்.
ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், வரவிருக்கும் ஹோண்டா எலிவேட், மற்றும் சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆகியவற்றை செல்டோஸ் எதிர்கொள்ளுகின்றது.