2020 ஆம் ஆண்டு முதல் பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் விலை உயர்த்தியுள்ள நிலையில் கியா நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி காரின் விலை ரூ.20,000 முதல் ரூ.35,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலின் படி செல்டோஸின் விலை ஜனவரி முதல் விலை உயர்த்தப்பட உள்ளதாக குறிப்பிடுகின்றனர். இந்நிறுவனம் அறிமுக விலையாக வெளியிட்ட செல்டோஸ் காரின் ஆரம்ப விலை ரூ.9.69 லட்சத்தில் துவங்குகின்றது.
புதிய 1.4 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக குதிரைத்திறன் 138 bhp மற்றும் 242 Nm டார்க் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
இந்த என்ஜின் 9.7 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்டும், மேலும், 16.1 கிமீ (MT) மற்றும் 16.2 கிமீ (DCT) மைலேஜ் வழங்கப்படும். குறிப்பாக இந்த என்ஜின் ஜிடி லைன் தொடரில் மட்டும் கிடைக்க உள்ளது.
1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.
இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.
கியா நிறுவனம், இந்தியாவில் அடுத்த மாடலாக கார்னிவல் எம்பிவி மற்றும் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் வென்யூ அடிப்படையிலான எஸ்யூவி மற்றும் செல்டோஸ் அடிப்படையில் மின் காரை வடிவமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.