ரூ.3.20 கோடியில் லம்போர்கினி யூரஸ் சூப்பர் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்த 12 மாதங்களில் 50 யூனிட்டுகளை டெலிவரி செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தை இந்த ஆண்டின் தொடக்க முதல் சரிவை சந்தித்து வரும் நிலையில் ஆடம்பர எஸ்யூவி காரின் விற்பனை அமோகமான வளர்ச்சி பெற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
விற்பனை குறித்து கருத்து தெரிவித்த லம்போர்கினி இந்தியாவின் தலைவர் சரத் அகர்வால் கூறுகையில், “நாங்கள் யூரஸை அறிமுகப்படுத்திய முதல் சில சந்தைகளில் இந்தியாவும் இருந்தது. மேலும், இது எதிர்காலத்தில் நமது வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். லம்போர்கினி யூரஸ் லம்போர்கினி டிஎன்ஏ-வில் மிக சிறப்பான உணர்வுப்பூர்வமான ரைடிங் அனுபவம் மற்றும் சிறப்பான வசதிகளை பெற்றுள்ளது. யூரஸ் வாடிக்கையாளர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் முதன்முதலில் இந்த பிராண்டை வாங்குபவர்களாக உள்ளனர், மேலும் லம்போர்கினி இந்திய மாடல் வரிசையில் யூரஸ் சேர்க்கப்பட்டதால், இது இந்தியாவில் புதிய எல்லையை உருவாக்க காரணமாக அமைந்துள்ளது.
லம்போர்கினி யூரஸ் காரை ஒரு ‘சூப்பர் எஸ்யூவி’ என்று வர்ணிக்கின்றது. 4.0 லிட்டர், இரட்டை-டர்போ வி8 என்ஜின் பொருத்தபட்டு அதிகபட்சமாக 650 ஹெச்பி மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்துவதுடன், நான்கு சக்கரங்களுக்கும் பவரை 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் மூலம் வழங்குகின்றது. லம்போர்கினி 2.2 டன் எடையுள்ள யூரஸ் 3.6 விநாடியில் 0-100 கிமீ வேகத்தை எட்டுவதுடன் இது அசல் முர்சிலாகோ காரை விட விரைவானதாக குறிப்பிடப்படுகின்றது. யூரஸ் காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும்.
இந்தியாவில் லம்போர்கினி யூரஸ் எஸ்யூவி விலை ரூ.3.20 கோடி (எக்ஸ்ஷோரூம் இந்தியா).