இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி கார் ரூ.7.90 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. எக்ஸ்யூவி300 பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்விலும் கிடைக்க உள்ளது.
மஹிந்திரா சாங்யாங் நிறுவனத்தின் டிவோலி எஸ்யூவி அடிப்படையில் புதிய எக்ஸ்யூவி300 எஸ்யூவி 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் சவாலான விலையில் ஸ்டைலிஷான அம்சங்களை பெற்றதாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக Mahindra XUV300 காரில் இடம்பெற்றுள்ள 7 ஏர்பேக்குகள், 4 டிஸ்க் பிரேக்குகள், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார், சன் ரூஃப், 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் போன்றவை 4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற எஸ்யூவி போட்டியாளர்களிடம் இல்லாத வசதிகளாகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி
மஹிந்திராவின் பாரம்பரிய கிரில் மற்றும் தோற்ற பொலிவினை கொண்டுள்ள இந்த காரில் ஸ்டைலிஷான தானியங்கி புராஜெக்டர் முகப்பு விளக்குடன் கூடியதாக எல்இடி ரன்னிங் விளக்கினை பெற்று விளங்குகின்றது. எக்ஸ்யூவி 300 காரில் 17 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் பெற்று நேர்த்தியாக உள்ளது. 3995 மிமீ நீளமும், 1821 மிமீ அகலமும், 1627 மிமீ உயரமும் கொண்டுள்ள XUV300 காரின் வீல்பேஸ் 2600 மிமீ ஆகும்.
5 இருக்கை, 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் தொடர்பு, வாய்ஸ் கமான்ட், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளுடன் அமைந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டாப் W8 (O) வேரியன்டில் அதிகபட்சமாக 7 காற்றுப்பைகள், ரிவர்ஸ் கேமரா, முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார் மற்ற அனைத்து வேரியண்டிலும் ஏபிஎஸ் , இபிடி போன்றவற்றை அடிப்படை அம்சமாக பெற்றதாக விளங்கும். மேலும் நடைமுறக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் (Bharat New Vehicle Safety Assessment Program -BNVSAP) விதிகளுக்கு ஏற்றதாக வந்துள்ளது.
இந்த காரில் உள்ள ஸ்மார்ட் ஸ்டீயரிங் மோட், மிக சிறப்பான முறையில் ஓட்டுநருக்கு தேவையான வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள கம்ஃபோர்ட், நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான மோடினை பெற்றுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 என்ஜின் விபரம்
பெட்ரோல் மற்றும் டீசல் என இரு தேர்வுகளில் கிடைக்க உள்ள எக்ஸ்யூவி300 காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன்கள் உள்ளது.
110 hp பவர் மற்றும் 200 NM டார்க் வழங்குகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மஹிந்திரா XUV300 பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ ஆகும்.
டீசல் தேர்வில் 115 hp பவர் வெளிப்படுத்தும் என்ஜின் அதிகபட்சமாக 300 NM டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். மஹிந்திரா XUV300 டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 20 கிமீ ஆகும்.
எக்ஸ்யுவி300 எஸ்யூவி மாடலில் மொத்தம் நான்கு வேரியன்ட்டுகள் கிடைக்க உள்ளது. அவை W4, W6, W8 மற்றும் W8 (O) என விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் பொதுவாக கிடைக்க உள்ளது.
போட்டியாளர்கள்
இந்தியாவில் 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தில் விற்கப்படுகின்ற பிரசத்தி பெற்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான், ஹோண்டா WR-V, ரெனோ டஸ்ட்டர், ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் நிசான் கிக்ஸ் உள்ளிட்ட மாடல்களை நேரடியாக மஹிந்திரா XUV300 கார் எதிர்கொள்ளும் வகையில் மிகவும் சவாலான அம்சத்தை பெற்று வந்துள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 விலை பட்டியல்
XUV300 W4 (petrol) – ரூ. 7.90 லட்சம்
XUV300 W6 (petrol) – ரூ. 8.75 லட்சம்
XUV300 W8 (petrol) – ரூ. 10.25 லட்சம்
XUV300 W8 (O) (petrol) – ரூ. 11.44 லட்சம்
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 டீசல் கார் விலை பட்டியல்
XUV300 W4 (Diesel) – ரூ. 8.49 லட்சம்
XUV300 W6 (Diesel) – ரூ. 9.30 லட்சம்
XUV300 W8 (Diesel) – ரூ. 10.80 லட்சம்
XUV300 W8 (O) (Diesel) – ரூ. 11.99 லட்சம்
(விற்பனையக விலை டெல்லி)