நாட்டின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி, வரும் 2021 ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் கார் முதல் பல்வேறு மேம்படுத்தப்பட்ட மாடல்கள் மற்றும் எஸ்யூவிகளை வெளியிட திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு முதலே சோதனை செய்யப்பட்டு வருகின்ற வேகன் ஆர் அடிப்படையிலான எலக்ட்ரிக் கார் குறைந்த விலையில் சிறப்பான ரேஞ்சு வழங்கும் வகையில் அமைந்திருக்கலாம். 150 கிமீ ரேஞ்சு வெளிப்படுத்துவதுடன் ரூ.10 லட்சத்திற்குள் விலை அமைய வாய்ப்புகள் உள்ளது. நாட்டில் போதுமான மின் சார்ஜிங் கட்டமைப்பினை பெற்ற பிறகு விற்பனைக்கு வெளியாகும் என்பதனால் 2021 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட புதிய செலிரியோ காரின் அறிமுகம் கோவிட்-19 பரவல் காரணமாக அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களுக்கு மாற்றப்பட்டது. தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்ற செலிரியோ காரில் டிசைன் மாற்றங்கள் உட்பட கூடுதலான வசதிகளுடன் தொடுதிரை பெற்ற இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டிருக்கும்.
செலிரியோ காரில் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டு 67 ஹெச்பி பவர் மற்றும் 90 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
விற்பனையில் உள்ள வேகன் ஆர் காரின் பிரீமியம் வெர்ஷன் மாடலாக நெக்ஸா டீலர்கள் மூலம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள மாருதியின் எக்ஸ்எல்5 முன்பாக கிடைக்கின்ற எக்ஸ்எல் 6 போல டிசைன் அம்சங்களை பெற்றிருக்கலாம். இந்த மாடல் முன்பே இந்திய சந்தையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருவதனால் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.
டிசையர் காரின் ஃபேஸ்லிஃப்ட் முன்பே விற்பனைக்கு வெளியான நிலையில் புதிய மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்றது. முன்புற பம்பர், கிரில், பின்புற பம்பர் அமைப்பில் மாற்றங்களை பெற்று இன்டிரியரில் சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ் செய்யப்பட்டிருக்கும்.
கடந்த சில வருடங்களாக எதிர்பார்க்கப்படுகின்ற மாடல்களில் ஒன்று 7 இருக்கை பெற்ற வேகன் ஆர் கார், இந்நிறுவனம் எர்டிகா காரை விற்பனை செய்து வரும் நிலையில் இதனை விட குறைவான விலையில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்ட மாடல் ரெனோ ட்ரைபர் காரை எதிர்கொள்ளும் வகையில் வெளியிட வாய்ப்புள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்ட ஜிப்ஸி எஸ்யூவி காரின் நான்காம் தலைமுறை ஜிம்னி சர்வதேச அளவில் மூன்று கதவுகளை பெற்ற கார் விற்பனையில் உள்ள நிலையில், இந்திய சந்தைக்கு 5 கதவுகளை பெற்று 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டதாக ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற வகையில் வெளியாகக்கூடும்.
கிரெட்டா, சொனெட் உட்பட எக்ஸ்யூவி 500 என பிரசத்தி பெற்ற கார்களை எதிர்கொள்ளும் வகையில் டொயோட்டா-சுசூகி கூட்டணியில் தயாரிக்கப்பட உள்ள சி பிரிவு எஸ்யூவி கார் 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. இந்த காரினை தயாரிக்க டொயோட்டா பிளாட்ஃபாரம் பயன்படுத்தப்படலாம்.