₹ 10 லட்சம் விலையில் வெளியாகவுள்ள எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் காமெட் எலக்ட்ரிக் காரில் இடம்பெற உள்ள இன்டிரியர் தொடர்பான முதல் படத்தை டீசராக வெளியிட்டுள்ளது. இந்த கார் சிறிய அளிவிலான தோற்றத்தில் இரண்டு டோர்களை பெற்று நான்கு இருக்கைகளை கொண்டிருக்கும்.

காமெட் என்ற பெயருக்கு தமிழில் ‘வால்மீன்’ என பொருள்படுகின்றது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மேக்ராபர்ட்சன் விமான போட்டியில் பங்கேற்ற 1934 ஆம் ஆண்டின் சின்னமான பிரிட்டிஷ் விமானத்தின் பெயரை நினைவுப்படுத்துவதாக அமைந்துள்ளது.

Comet Electric car

காமெட் EV கார் தொடர்பாக வெளியிட்டுள்ள டீசரில் இரண்டு ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீலில் இரண்டு பக்கத்திலும் கண்ட்ரோல் பொத்தான்கள் இடம்பெற்றுள்ளது.  இந்த மல்டி-ஃபங்சன் பொத்தான்கள் ஆப்பிள் ஐபாட்டில் உள்ள வடிவத்தை உந்துதலாக பெற்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பொத்தான்களின் மூலம் ஆடியோ, நேவிகேஷன் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான குரல் வழி உத்தரவு வசதி கட்டுப்படுத்தும் என உறுதியாகியுள்ளது.

ஸ்டீயரிங் வீலுக்குப் பின்னால் முன்பே குறிப்பிட்டபடி டேஷ்போர்டில் மிக நேர்த்தியாக அமர்ந்திருக்கும் மிதக்கும் வகையில் இரண்டு பிரிவுகளாக கொண்ட 10.25-இன்ச் திரைகளை கொண்டு இரட்டைத் திரை பெற்றுள்ளது. இரண்டு ஏசி வென்ட்கள் திரைக்கு கீழே வைக்கப்பட்டு, அதன் கீழே குரோம் பூச்சூ பெற்ற ரோட்டரி ஏர் கண்டிஷனிங் சுவிட்சுகள் உள்ளன.

காமெட் EV காரில் சுமார் 17.3 kWh மற்றும் 26.7 kWh திறன் கொண்ட இரண்டு பேட்டரி ஆப்ஷன் மூலம் இயக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விலை குறைப்பதற்காக பேட்டரி உள்நாட்டில் மிகவும் நம்பகமான டாடா AutoComp நிறுவனத்தில் இருந்து பெறப்பட உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளதால் பேட்டரி பேக் விபரம் எவ்வாறு அமைந்திருக்கும் என்ற உறுதியான தகவல் கிடைக்கவில்லை. மேலும், மாடல் 200 கிமீ (17.3kWh) முதல் 300 கிமீ (26.7kWh) வரையிலான ரேஞ்சை கொடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. மோட்டார் அதிகபட்சமாக 50kW (68hp) பவர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த சில வாரங்களுக்குள் எம்ஜி காமெட் EV கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.