இந்தியாவில் மோரீஸ் காரேஜஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி எம்ஜி ஹெக்டர் முன்பதிவு எண்ணிக்கை 21 ஆயிரம் கடந்துள்ளது. எனவே, தற்காலிகமாக ஹெக்டர் காருக்கான முன்பதிவை இந்நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த ஜூன் 4 ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்பட்ட இந்த காரின் புக்கிங் எண்ணிக்கை 21,000 கடந்துள்ளதை தொடர்ந்து, 2019 ஆண்டிற்கான உற்பத்தி செய்யப்பட உள்ள கார்களுக்கான விற்பனை நிறைவடைதுள்ளது. எனவே, தற்காலிகமாக புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது.
ஹெக்டர் எஸ்யூவியின் விலை அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே, 2019 ஆம் ஆண்டிற்கு கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது. குஜராத்தின் ஹலோலில் உள்ள தனது ஆலையில் கார் தயாரிப்பாளர் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு வருகின்றது. படிப்படியாக உயர்த்தப்பட்டு, அக்டோபர் 2019 முதல் மாதம் 3,000 கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா கூறுகையில், “ஹெக்டருக்கு பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. தொடக்கநிலையில் வாடிக்கையாளர்களின் தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே, நாங்கள் தற்காலிகமாக முன்பதிவுகளை நிறுத்துகின்றோம். எம்ஜி மீது மிகுந்த நம்பிக்கையைக் காட்டிய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் சிறப்பான முறையில் தரமான மாடலை வழங்குவோம். தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி படிப்படியாக உற்பத்தியை அதிகரிக்க எங்கள் சப்ளையர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்”. என குறிப்பிட்டுள்ளார்.
எம்ஜி ஹெக்டர் விலை பட்டியல்
விற்பனைக்கு முன்பாக 21,000 அதிகமான முன்பதிவுகளை பெற்றுள்ள எம்ஜி ஹெக்டர் அறிமுக விலை ரூ.12.18 லட்சம் ஆகும்.