எம்ஜி மோட்டார் இந்தியா, 7 இருக்கை கொண்ட கம்பீரமான மேக்சஸ் D90 எஸ்யூவி (MG Maxus) மாடலை விற்பனைக்கு 2020 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கொண்டு வரவுள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு வெளியிட உள்ள எம்ஜி ஹெக்டர் காரை தொடர்ந்து, இந்த ஆண்டின் இறுதியில் எலெக்ட்ரிக் ரக eZS எஸ்யூவி காரை வெளியிட உள்ளது. தொடர்ந்த தனது மாடல்களின் எண்ணிக்கை இந்திய சந்தையில் அதிகரிக்கும் நோக்கில் எம்ஜி செயல்பட்டு வருகின்றது.
எம்ஜி மேக்சஸ் D90 எஸ்யூவி
இந்திய சந்தையில் கிடைக்கின்ற டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டேவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் பஜெரோ ஸ்போர்ட் உள்ளிட்ட பிரபலமான பிரீமியம் எஸ்யூவி மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
SAIC கீழ் செயல்படும் எம்ஜி நிறுவனம் தனது கார் மாடல்களை மிக வேகமாக விற்பனைக்கு கொண்டு வர மிக தீவரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சீன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற டி90 காரில் 224 BHP பவர் மற்றும் 360 Nm டார்க் வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டு 6 வேக ஆட்டோ மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. பெட்ரோல் என்ஜின் கொண்ட டி90 காரில் 7 விதமான டிரைவிங் மோடுகள் உள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வெளியாகலாம்.
இலகுரக டிரக் பிளாட்பாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மேக்சஸ் எஸ்யூவி முகப்பு மிரட்டலான தோற்றத்தை வெளிப்படுத்தும் கிரிலுடன் மிகப்பெரிய எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது. இரு வண்ண கலவையிலான அலாய் வீல் 17 அங்குலம் முதல் 21 அங்குல அளவுகளில் பெற்ற வீல் கிடைக்கும்.
5 மீட்டர் நீளம் கொண்ட இந்த எஸ்யூவியின் வீல்பேஸ் 2,950 மிமீ ஆக உள்ளதால் மிக தாராளமான இடவசதியுடன், பல்வேறு டெக் வசதிகளை உள்ளடக்கிய 12.3 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்டு 8 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், 6 ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி, 360 டிகிரி கேமரா போன்றவற்றை கொண்டிருக்கும். சர்வதேச மாடல்களில் ஆட்டோமேட்டிக் பார்க்கிங் வசதி, ஆட்டோமேட்டிக் அவசரகால பிரேக்கிங் போன்றவை உள்ளது.
ரூபாய் 30 லட்சம் முதல் ரூபாய் 35 லட்சம் விலைக்குள் இந்தியாவில் எம்ஜி மேக்சஸ் டி90 எஸ்யூவி விற்பனைக்கு அடுத்த ஆண்டின் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கலாம். SAIC கீழ் சீனாவில் மேக்சஸ் பிராண்டு மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றது.
நன்றி – ஆட்டோகார் இந்தியா