இந்தியர்களின் மிக பிரபலமான ஆஃப் ரோடு வாகனமாக விளங்குகின்ற மஹிந்திரா தார் எஸ்யூவி மாடலின் இரண்டாம் தலைமுறை மாடல் தயாராகி வருகின்றது.
முன்னணி யுட்டிலிட்டி ரக வாகன தயாரிப்பாளராக விளங்கும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றாக விளங்கும் ஆஃப் ரோடு மாடலான தார் எஸ்யூவி காரின் இரண்டாம் தலைமுறை மாடலின் சோதனை ஓட்ட பங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தார் எஸ்யூவி ஆஃப் ரோடு விரும்பிகளுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்வதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான வசதிகளை இணைப்பது வரை மஹிந்திரா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், நவீன தலைமுறையினர் விரும்பும் வகையில் புதிய பொலிவு மற்றும் நவீன வசதிகள் என பல்வேறு அம்சங்களை பெற்ற மாடலாக வெளியாக உள்ள புதிய தலைமுறை தார் எஸ்யூவி மாடலின் வடிவ மொழி வடிவமைப்பினை, இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் மஹிந்திரா டிசைன், பினின்ஃபாரீனா மற்றும் சாங்யாங் ஆகிய நிறுவனங்களின் கூட்டு டிசைன் வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட உள்ளது.
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற தார் காரானது முந்தைய தலைமுறை ஸ்கார்ப்பியோ மற்றும் பொலிரோ மாடல்களை பின்னணியாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உருவாகி வரும் புதிய தார் முந்தைய மாடலை காட்டிலும் அதி நவீன டிசைன் அம்சங்களுடன் கூடுதல் ஆஃப் ரோடு திறனை வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்திருக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
வருகின்ற 1 ஏப்ரல் 2020 முதல் மத்திய அரசு இரு சக்கர வாகனம் (2019 ஏப்ரல் 1 முதல்) மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பாதுகாப்பு சார்ந்த வசதிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க திட்டமிட்டுள்ளதால், புதிய தார் மாடல் பாரத் கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்றப்படி வடிவமைக்கப்பட்டு இரட்டை காற்றுப்பை , ஏபிஎஸ் உள்ளிட்ட அடிப்படை அம்சங்க்களை கொண்டதாக வரக்கூடும்.
தார் எஸ்யூவி மாடலில் இடம்பெற்றுள்ள 2.5 லிட்டர் CRDe மற்றும் 2.5 லிட்டர் Di என்ஜினுக்கு மாற்றாக, பாரத் ஸ்டேஜ் 6 எனப்படும் பிஎஸ் 6 மாசு விதிமுறைக்கு உட்பட்ட 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கலாம். மேலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் நிரந்தரமாக இடம்பெற்றிருப்பதுடன் புதிய லேடர் அடிச்சட்டத்தில் வடிவமைக்கப்பட்டு முந்தைய மாடலை விட கூடுதல் நீளம் மற்றம் அகலத்தை பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
சமீபத்தில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் முழுதும் மறைக்கப்பட்ட தார் எஸ்யூவி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த மாடல் தற்போது விற்பனையில் உள்ள தாரின் பாகங்களை பெரும்பாலும் கொண்டதாக அறியப்பட்டாலும், இது தொடக்க நிலை சோதனை ஓட்டம் என்பது தெரிய வருகின்றது.
விரைவில் இந்நிறுவனத்தின் புதிய காம்பேக்ட் ரக மஹிந்திரா எஸ்யூவி வெளியிடப்பட உள்ள நிலையில், சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் 2020 மஹிந்திரா தார் எஸ்யூவி, வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதி அல்லது 2020 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் சந்தைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.