ரூ.5.50 லட்சத்திற்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிசான் மேக்னைட் எஸ்யூவி காரினை 2020 ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 4 மீட்டருக்கு குறைந்த நீளம் கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தவல்ல மாடலாக விளங்க உள்ளது.
ரெனோ-நிசான் கூட்டணியின் CMF-A பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரைபர் காரை வடிவமைக்கப்பட்ட பிளாட்ஃபாரம் ஆகும். ரெனால்ட் நிறுவனத்தின் கைகெர் காம்பேக்ட் எஸ்யூவி மாடலும் நிசான் நிறுவன புதிய எஸ்யூவி மாடலும் பெரும்பாலான பாகங்களை பகிர்ந்து கொள்ள உள்ளது.
மேக்னைட் மற்றும் கைகெர் எஸ்யூவி மாடலில் 95 hp பவரை வழங்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாடலகளில் ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா சோனெட் எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும். எனவே, இந்த காரின் விலை ரூ.5.50 லட்சத்திற்குள் துவங்கலாம். அதே நேரத்தில் ரெனால்ட் கைகெர் விலை ரூ. 5.50 லட்சத்திற்கு கூடுதலாக அமைந்திருக்கலாம்.