நேற்று நடைபெற்ற சியாம் 57வது ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் பேசிய சியாம் தலைவர் மற்றும் அசோக் லேலண்டு சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் வினோத் கே. தாசரி கூறுகையில் மத்திய அரசு 15 ஆண்டுகள் பழைமையான வாகனங்கள் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
பழைய வாகனங்களுக்கு தடை
இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 57வது ஆண்டு வருடாந்திர கூட்டத்தில் எதிர்கால மின்சார கார்கள் குறித்தான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய சியாம் தலைவர் மற்றும் அசோக் லேலண்டு சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் வினோத் கே. தாசரி கூறுகையில் முந்தைய மாசு விதிகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட எஞ்சின் பெற்றுள்ள 15 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பழைய வாகனங்களை பயன்படுத்துவதனால் மாசு உமிழ்வு அதிகரிப்பதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு மிக அதிகமாக ஏற்படுகின்றது. எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு இதற்கான தனி சட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார.
வரும் 2020 ஆம் ஆண்டு முதல் பிஎஸ் 6 மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ற முறை நடைமுறைக்கு கொண்டு வர அரசு தீவரமான முயற்சியை மேற்கொண்டுள்ளதால், தயாரிப்பாளர்கள் அதற்கான பணிகளை தொடங்கி விட்டனர் . இந்தியாவின் வாகன துறை மிக வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில், இதற்கான பிரத்யேக தேசிய வாகன வாரியம், உற்பத்தி சாரந்த துறைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.