கடந்த ஜூலை 2019 மாதந்திர ஆட்டோமொபைல் விற்பனை நிலவரம் 31 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் 3.30 லட்சத்துக்கு அதிகமானோர் வேலை இழந்துள்ளனர். இதே நிலை தொடரும் எனில் மேலும் லட்சக்கணக்கானோர் வேலை இழக்க நேரிடும் என மோட்டார் வாகன வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய ஆட்டோமொபைல் துறையில் சியாம் அறிக்கையின் படி, இந்திய உற்பத்தி அடிப்படையிலான ஜிடிபி-ல் 49 சதவீத பங்களிப்பும், ஜிஎஸ்டி வரி வசூலிப்பதில் மோட்டார் துறையின் பங்கு 13-14 சதவீதமாக உள்ளது. மேலும், நேரடியாக மற்றும் மறைமுகமாக சுமார் 37 லட்சம் மக்கள் வேலை பெற்று வருகின்றனர். கடந்த 10 மாதங்களாக ஏற்பட்டு வரும் தொடர் சரிவினால் சுமார் 3.30 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதே நிலை வரும் மாதங்களில் தொடரும் எனில் வேலை இழப்பு என்பது அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனம், கடந்த ஜூலை 2018 மாதத்துடன் ஒப்பீடுகையில் ஜூலை 2019-ல் 36 சதவீத வீழ்ச்சியடைந்துள்ளது. அதேவேளை மஹிந்திரா, டாடா, ஹூண்டாய், ஹோண்டா, டொயோட்டா நிறுவனங்களும் சரிவினை கண்டுள்ளன.
குறிப்பாக மொத்த பயணிகள் வாகனங்கள் ( கார், யூட்டிலிட்டி மற்றும் வேன் உட்பட) விற்பனை ஜூலை 2018 மாதத்தில் 2,90,391 எண்ணிகையில் வாகனங்கள் விற்கப்பட்டன. ஆனால் ஜூலை 2019 முடிவில் 2,00,790 பயணிகள் வாகனங்கள் மட்டுமே விற்கப்பட்டன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பீடுகையில் 30.98 சதவீத வீழ்ச்சியாகும்.
இதே மாதரியான ஒரு வீழ்ச்சியை ஆட்டோமொபைல் துறை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பாக 2000 ஆம் டிசம்பர் மாதத்தில் 35 சதவீத வீழ்ச்சி அடைந்தது.
இன்று நடைபெற்ற இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய கூட்டமையின் தலைவர், விஷ்னு மாத்தூர் கூறுகையில், ஆட்டோமொபைல் துறை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அரசு தரப்பில் ஆதரிக்க வேண்டிய நேரம் இது எனவே, இதனை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆட்டோமொபைல் துறைக்கு தற்போது 28 சதவீதம் ஜிஎஸ்டி நிர்ணைக்க செய்யப்பட்டுள்ளது. அதனை குறைத்து 18 சதவீதமாக மாற்ற வேண்டும் என சியாம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரவுள்ள புதிய பாதுகாப்பு நடைமுறைகள் பிஎஸ் 6 மாசு உமிழ்வு உட்பட பல்வேறு மாற்றங்களை ஆட்டோமொபைல் துறை எதிர்கொண்டு வருகின்றது. எனவே, தொடர்ந்து வாகனங்களின் விலை என்பது இனி குறைவதற்கான வாய்ப்புகள் இல்லாத ஒன்றாகவே இருக்கும்.