இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற பழமையான மோட்டார்சைக்கிள் பிராண்டுகளில் ஜாவா தற்போது அறிமுகமாகியுள்ள நிலையில், அதனை தொடர்ந்து யெஸ்டி மற்றும் பிஎஸ்ஏ பிராண்டுகளில் மோட்டார்சைக்கிள்களை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா குழுமத்தின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தில் 60 சதவீத பங்கினை கொண்டுள்ள மஹிந்திரா நிறுவனம் , நேற்று மிகவும் பிரசத்தி பெற்ற ஜாவா பிராண்டில் ஜாவா , ஜாவா 42 மற்றும் ஜாவா பெர்டோ என மொத்தமாக மூன்று பைக்குகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ள நிலையில், இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் யெஸ்டி பிராண்டில் 250சிசி அல்லது அதற்கு கூடுதலான திறன் பெற்ற நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் மாடல்களை அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.
இந்நிறுவனத்தின் கீழ் செயல்படும் மற்றொரு பழமையான பாரம்பரியமிக்க பி.எஸ்.ஏ பிராண்டில் 500சிசி முதல் 750சிசி வரையிலான எஞ்சின் திறன் பெற்ற மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்தியா மற்றும் ஏற்றுமதி சந்தையில் விற்பனை செய்வதற்கான முயற்சியில் களமிறங்க திட்டமிட்டுள்ளதால், பிஎஸ்ஏ பிராண்டில் 2019 ஆம் ஆண்டின் மத்தியில் பைக்குகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றது.