பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணையான டீசல் என்ஜின் கார் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக ரெனோ இந்தியா நிறுவனத்தின் ட்ரைபர் எம்பிவி அறிமுகத்தின் போது இந்நிறுவன முதன்மைச் செயல் அதிகாரி திய்யெரி போலோர் தெரிவித்துள்ளார்.
மாருதி சுஸுகி உட்பட முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறிய ரக டீசல் என்ஜின் பெற்ற கார்களை நீக்க முடிவெடுத்துள்ள நிலையில், இந்த வரிசையில் ரெனோ இந்தியா நிறுவனமும் இணைந்துள்ளது.
பிஎஸ் 6 டீசல் கார்
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் சிறிய ரக கார்கள் மீதான ஆர்வம் மக்களிடையை குறைந்து வரும் நிலையில், பிஎஸ் 6 போன்ற மேம்பட்ட மாசு உமிழ்வுக்கு இணையான என்ஜினை தயாரிக்க கூடுதல் முதலீடு காரணமாக டீசல் கார்களின் விலை பண்மடங்கு உயரக்கூடும் என்பதனால் பெரும்பாலான முன்னணி மோட்டார் நிறுவனங்கள், சிறிய டீசல் கார்களுக்கு முதலீடு செய்வதை தவிர்க்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கான நடவடிக்கையை ரெனால்ட் நிறுவனமும் மேற்கொண்டுள்ளது. குறிப்பாக ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா நிறுவனத்தின் பிரபலமான 1.5 லிட்டர் K9K டீசல் எஞ்சின் அதிக நம்பகத்தன்மையையும் பெற்றிருக்கிறது. இந்த என்ஜின் ரெனோ டஸ்ட்டர், லாட்ஜி, கேப்டூர் நிசான் சன்னி, கிக்ஸ் டெரானோ உள்ளிட்ட மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2020 முதல் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு ஏற்ப இந்த என்ஜினை தயாரிக்க அதிக முதலீடு தேவைப்படுவதனால் இந்த என்ஜினை தயாரிக்கும் திட்டத்தை கைவிடுவதாக ரெனோ இந்திய உறுதிப்படுத்தியுள்ளது.