சீனாவின் எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்து நாட்டின் எம்ஜி மோட்டார் (MG Motor India) நிறுவனம் இந்திய சந்தையில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா
- சீனாவின் எஸ்ஏஐசி குழுமத்தின் அங்காமாக எம்ஜி மோட்டார் செயல்படுகின்றது.
- குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹலோல் தொழிற்சாலையை வாங்க உள்ளது.
- இந்தியாவின் சிசிஐ (CCI) அமைப்பு ஆலையை வாங்க ஒப்புதல் அளித்துள்ளது.
MG Motor என்றால் Morris Garages மோர்ரீஸ் காரேஜ்ஸ் ஆகும்.
இந்தியாவில் களமிறங்கும் சீனாவின் முதல் வாகன தயாரிப்பு நிறுவனமாக எஸ்ஏஐசி விளங்கும், சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் நிறுவனத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்தைச் சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வாயிலாக இந்திய சந்தையில் கார்களை உற்பத்தி செய்ய எஸ்ஏஐசி திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணி நிறுவனமாக சீன சந்தையில் செயல்பட்டு வரும் எஸ்ஏஐசி நிறுவனத்தின் சார்பாக சமீபத்தில் சீன சாங்காய் ஸ்டாக் சந்தையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் ஜிஎம் நிறுவனத்தின் குஜராத் ஹலோல் ஆலையை கையகப்படுத்தும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வருகின்ற ஏப்ரல் 28, 2017 அன்றுடன் செவர்லே நிறுவனத்தின் ஹலோல் ஆலையின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதால் , அந்த ஆலையை எம்ஜி நிறுவனம் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சீன நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த ஆலை 1996ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. விற்பனை சரிவு மற்றும் தொழிலாளர் பிரச்சனையால் இந்த மூடிவிட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தின் புனே அருகில் அமைந்துள்ள தாலேகான் தொழிற்சாலையை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஜிஎம் முடிவெடுத்துள்ளது.
இந்திய எம்ஜி மோட்டார் தலைமை செயல் அதிகாரியாக முன்னாள் இந்திய செவர்லே தலைவர் ராஜிவ் சாபா அவர்களை எஸ்ஏஐசி நியமித்துள்ளது. டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் எம்ஜி கார் நிறுவனம் அலுவலகத்தை திறந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது.
தொடக்கநிலை மற்றும் நடுத்தர சந்தையில் ஹேட்ச்பேக் ,செடான் , காம்பேக்ட் எஸ்யூவி மற்றும் எஸ்யூவி மாடல்களை மிகவும் சவாலான விலையில் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கம் வகையில் அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. உள்நாட்டிலே பாகங்களை உற்பத்தி செய்யவும் , ஜிஎம் டீலர்களை பயன்படுத்திக் கொள்ளவோ அல்லது புதிய டீலர்களை நியமிக்கும் வாய்ப்புகள் உள்ளது. அடுத்த சில வாரங்களில் அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
மேலும் சமீபத்தில் வெளியான மற்றொரு தகவல் இந்திய சந்தையில் செவர்லே வெளியேறுவதாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டாலும் ஆனால் இது உறுதி செய்யப்படவில்லை.