தமிழக அரசியல் வரலாற்றில் மிக மோசமான காலமாக விளங்குகின்ற இந்த சூழ்நிலையில் தமிழகத்தை விட்டு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையினர் மாற்று மாநிலங்களை தேடி வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட இரண்டு எம்.எல்.ஏக்கள் வாகன பதிவிற்கு ஒரே எண்ணுக்கு சிபாரிசு கடிதம் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருப்பூர் பரிதாபம்
திருப்பூர் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., விஜயகுமார்; தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ., குணசேகரன். இருவரும், அ.தி.மு.க., பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே, தொகுதி எல்லையில் நடக்கும் விழா தொடர்பாக, முட்டல், மோதல் இருந்து வருகிறது.
இந்நிலையில், ஒரே பதிவெண்ணை, இருவரும், தங்கள் ஆதரவாளருக்கு கேட்டு, ஆர்.டி.ஓ.,வை நச்சரித்தது, தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டி.என்., 39 சிசி- 0707 என்ற பதிவெண்ணை, தனக்கு வேண்டியவரின் டூ – வீலருக்கு ஒதுக்குமாறு, திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு, வடக்கு, எம்.எல்.ஏ., கடிதம் அனுப்பினார். அதே எண்ணை, நான்கு சக்கர வாகனத்துக்கு வழங்குமாறு, தெற்கு தொகுதி, எம்.எல்.ஏ.,வும் கடிதம் கொடுத்துள்ளார். வாகன பதிவு, கணினி மயமாக்கப்பட்ட நிலையில், சிறப்பு எண் வழங்க, அரசுக்கு பணம் செலுத்த வேண்டும். ஒரே எண்ணை கேட்டு, இருதரப்பும் பிடிவாதமாக இருந்ததால், இரு, எம்.எல்.ஏ.,க்களிடமும் பேசிய வடக்கு, ஆர்.டி.ஓ., நிலைமையை ஒருவாறாக சமாளித்தார்.
வடக்கு, ஆர்.டி.ஓ., சிவகுருநாதன் கூறுகையில், ”தற்போது, இப்பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. இருசக்கர வாகனத்துக்கு, சிறப்பு பதிவெண் பெற, 2,000 ரூபாய் கட்ட வேண்டும். நான்கு சக்கர வாகனம் எனில், 16 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என்றார்.
இதன்படி, தெற்கு, எம்.எல்.ஏ., குணசேகரனின் ஆதரவாளரின் நான்கு சக்கர வாகனத்திற்கு அந்த எண் ஒதுக்கப்பட்டு உள்ளது.–குடிநீர் பிரச்னை, தினமும் நடக்கும் மதுக்கடை எதிர்ப்பு விவகாரம், மோசமான ரோடுகள், சுகாதாரக்கேடு என, திருப்பூரில் தலைக்கு மேல், ஆயிரம் பிரச்னைகள் உள்ள நிலையில், அதில் அக்கறை காட்ட முன்வராத, எம்.எல்.ஏ.,க்கள், வாகன பதிவு எண் விவகாரத்தில், போட்டி போட்டு சிபாரிசு கடிதம் கொடுத்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதவி – தினமலர்